பொதிகையிலே பூத்தவளே -21

21

"ராஜாக்கள் எல்லாம் அவங்க புள்ளைக வளர்ந்து வாலிபம் ஆனதும் பட்டம் கட்டி வைச்சிருவாங்கல்ல.. அதுபோல மலை நாடு ஜமீன்தாரும் அவரோட புள்ளைக படிப்பை முடிச்சுட்டு வந்ததும் சொத்துக்களைப் பிரிச்சுக் கொடுத்திட்டாரும்மா.."
ஆறுமுகத்திற்கு மலைநாடு என்றழைக்கப்படும் கானாடுகிரியின் ஜமீன் வம்சத்தில் பிறந்த விஷ்வா என்ற விஸ்வநாதனின் மீது அளவு கடந்த ஆதர்சம் இருக்கிறது.. என்பது மீனாவுக்கு நன்றாகவே தெரியும்.. எங்க முதலாளி, தங்க முதலாளி என்று விஷ்வாவைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுபவர் அவர்.. அவனைப் பற்றி பேசுவது என்றால் அவருக்கு விருந்துச் சாப்பாட்டை ஒரு கட்டு கட்டுவதைப் போல இருக்கும்..
"நான் யாரும்மா..?"
இந்தக் கேள்வியில் ஆறுமுகத்தை உற்றுப் பார்த்தாள் மீனா.. நான் யார் என்பதைக் கண்டுபிடிக்க முயலும் சித்தரல்ல ஆறுமுகம்.. அப்புறமும் எதற்காக இந்தக் கேள்வி..? பேசாமல் நீங்கள் ஆறுமுகம் சார் என்று சொல்லி விடலாமா என்று யோசித்தாள் அது நன்றாக இருக்காது என்பதினால்..
"நீங்க இந்த மாலுக்கே மேனேஜர் சார்.." என்று பவ்யமாகச் சொன்னாள்..
ஆறுமுகம் மகிழ்ந்து போனார்.. முக மலர்ச்சியுடன்..
"மேஜேனர்தானே.. என்னைப் போய் பெரிய மனுசன் விருந்தாளியா வந்துட்டார்ன்னு வேலையாள்களைச் சொல்ல வைச்சாங்க.. அரண்மனையில சின்னச் சின்ன ரிசார்ட்டுகளைப் போல நிறைய கெஸ்ட் ஹவுஸ் இருக்கும்மா.. அதில ஒன்னுல என்னைத் தங்க வைச்சாங்க.. நேரா நேரத்துக்கு ஆடு, கோழி, மீனுன்னு உப்பும் உறைப்புமா வறுவலோட சாப்பாடு.. மலையையும் எஸ்டேட்டுகளையும் சுத்திப் பார்க்க டிரைவரோட ஜீப்புன்னு அப்படி ஒரு கவனிப்பு.."
"வீட்டுக்குள் சேர்க்காமல் தள்ளித் தங்க வைத்து வேலையாள்கள் மூலம் சாப்பாடு கொடுத்து விடுவதற்குத்தான் விருந்தாளின்னு பேரா சார்.. இந்தப் பணக்காரங்களே இப்படித்தான் சார்.."
"பட்டுன்னு சொல்லிட்டியேம்மா.. நம்ம முதலாளியப் பார்த்தாத் தள்ளி வைக்கிறவரப் போலவா தெரியுது..?" மனத்தாங்கலுடன் கேட்டார் ஆறுமுகம்..
இல்லையென்பதை எப்படி ஒப்புக் கொள்வது..? மனதில்லாமல் மௌனமாக இருந்தாள் மீனாம்பிகை.. விஷ்வாவை நல்லவன் என்று ஒப்புக் கொள்ள அவளுக்கு மனம் வருவதேயில்லை.. அப்படி அவள் நினைக்க ஆரம்பிக்கம் போதே மேகியின் முகம் மனதில் நிழலாடி விடுகிறதே..
"உன்னைப் போல யாரும் நாக்குமேல பல்லப் போட்டு, ஒற்றை வார்த்தயப் பேசிப்புடக் கூடாதுன்னுதான்  விருந்தாளிக கிளம்பறதுக்கு முதநாள் அரண்மனையில விருந்து தர்றாங்க.. அவங்களுடன் சேர்ந்து உக்காந்து சாப்பிட வைச்சு அனுப்பி வைக்கிறாக.. எனக்கும் அப்படித்தான் நடந்தது.. அடேங்கப்பா எப்பேற்பட்ட அரண்மனை அது.. மலைக்காடுன்னு சொல்ல முடியாத ஊரு.. கொடைக்கானல், ஊட்டி போல சிலுசிலுன்னு இருக்கும்.. எங்கிட்டுப் பார்த்தாலும் அருவி கொட்டும்.. தேயிலைத் தோட்டம், காய்கறித் தோட்டம்ன்னு வளமான பூமி.. அரண்மனையில சாப்பிடற ரூமே இந்த மால் அளவுக்குப் பெரிசா இருந்தது.. வழுவழுன்னு டைனிங் டேபிள்.. ரெண்டு பக்கமும் சேர்கள்.. பெரிய ஜமீன்தாரய்யா, ஜமின்தாரினி, நம்ம அய்யாவோட அண்ணன், அண்ணி, தங்கைன்னு அத்தனை பேரும் இருந்தாங்க.. என்கிட்ட அன்பாப் பேசினாங்க.. அவங்க கூட உக்hந்து சாப்பிட எனக்குத்தான் கூச்சமாக இருந்துச்சு.."
அவனைப் பற்றி எதைச் சொன்னாலும் எடுபடுவதில்லை.. சுவற்றில் அடித்த பந்த போல திரும்பி வந்து விடுகிறது.. அவன் உண்மையிலேயே நல்லவனோ..?
'அவன் நல்லவனா இருந்தா எனக்கென்ன..? கெட்டவனா இருந்தா எனக்கென்ன..? வேலயப் பாக்கறேன்.. சம்பளம் வாங்கறேன்.. அம்புட்டுத்தான்.. போவியா..' மீனா மனதுக்குள் நொடித்தாள்..
"அடிக்கடி அங்கே போவீங்களா சார்..?"
"இல்லம்மா.. இந்த மாலை முதலாளி வாங்கி கட்ட ஆரம்பிச்ச பின்னால போயித் தெரிஞ்சுக்கிட்டதுதான்.."
"அப்படிங்களா..? அதுக்கு முன்னால அவுகளைப் பத்தி தெரியாதுங்களா..?"
"கோவிலில பேசிக்குவாகம்மா, இப்புடியிப்புடி.. நம்ம மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வர குலதெய்வமக கும்பிடற ஜமீன் வம்சம் கானகிரி மலையில இருக்குன்னு சொல்லுவாக.. அச்சு அசல்.. நம்ம மீனாட்சியம்மன் கோவிலப் போலவே அங்கே பிடிமண் எடுத்துட்டுப் போயி அங்கே கட்டியிருக்காகன்னு சொல்லுவாக.. அப்பல்லாம், யாரோ ஒரு ஜமீன் குடும்பத்தப் பத்தின பேச்சுன்னு பட்டும் படாம தலய ஆட்டிட்டு வருவேன்.. கடைசியில பாத்தா, நமக்கு கனவிலயும் நினைக்காத வாழ்க்கையைக் கொடுக்க வந்த முதலாளியோட குடும்பமா அது இருந்திருக்கு.."
இதுதான் இறைவனின் திருவிளையாடல் என்ற நெகிழ்வுடன் தலையை ஆட்டி வைத்தாள் மீனாம்பிகை.. எதையோ பற்றிய பேச்சு என்று நினைப்போம்.. யாரோ, யாருக்காகவோ சொல்லும் சொல் என்று எடுத்துக் கொள்வோம்.. பின்னாளில் அது நம்முடன் சம்பந்தப்படும் போது மனதில் தோன்றுவது ஆச்சரியமா.. இல்லை ஸ்தம்பித்தலா..?
"அய்யாவை நேரில பார்க்க ஓர்தரம்.. மீனாட்சியம்மன் கோவில் பிரசாரத்தக் கொடுக்கப் போனவுககூட ஒரு தரம்..  அப்புறம் அய்யா வரச் சொல்லி இரண்டொருதரம்ன்னு போயிருக்கேன்.. சில்லுன்னு இருக்கும்மா.. இயற்கை காத்தும் பச்சைப் பசேல்ன்னு தேயிலைத் தோட்டமுமா திரும்பி வரவே தோணாது.."
"அங்கேயே இருந்திருக்க வேண்டியதுதானே.."
"சரியாப் போச்சு போ.. என் வூட்டுக்காரிக்கு யாரு பதிலு சொல்றது..? இப்படியொரு நினப்பு என் மனசில இருக்கிறது தெரிஞ்சா பேசியே கொன்னுருவா.."
"குடும்பத்தோட அங்கே குடி போயிர வேண்டியது தானே..?"
"மதுரையில பேராப் புகழாப் பொழைக்கிற காலம் வந்திருக்கப்ப மலைக்கு ஓடச் சொல்றியா..? கஷ்டப்பட்ட காலத்தில எல்லாம் கை தூக்கி விட்டது இந்த மதுரைச் சீமைதானேம்மா.. பத்து ரூபாய்க்கு நாலு இட்லி, தண்ணியாத் பொட்டுக்கடலைச்சட்னி, உப்பும் உறப்புமா மிளகாச் சட்னி, சுரைக்காச் சாம்பார்ன்னு வயிறு நிறைய பலகாரம் கொடுக்கற ஊரு நம்ம மதுரைதானேம்மா.."
உண்மைதான் என்று நினைத்துக் கொண்டாள் மீனா.. இருபது ரூபாயில் காலைப் பலகாரத்தை முடித்துக் கொள்ள முடியும்.. எத்தனையோ தினங்களில் இருபது ரூபாய்க்கு இட்லி வாங்கி காலை டிபனை முடித்திருக்கிறாள் புனிதா..
மூர்த்திக்கு மூன்று இட்லி.. மீனாவும் மோகனாவும் ஆளுக்கு இரண்டு இட்லி.. புனிதாவுக்கு ஒரு இட்லி.. மீந்திருக்கும் பழைய சோறில் இட்லிக்கான சாம்பாரை ஊற்றித் தொட்டுக் கொள்ள சட்னியை வைத்து பசியாறுவார்கள்..
எப்படிக் கட்டி வரும் என்று தெரியாது.. மதுரை மாநகரில் தெருவுக்கு இரண்டு மூன்று இட்லிக் கடையாவது இருக்கும்.. வீட்டுத் திண்ணை அல்லது வாசல்களில் அடுப்புக் கட்டி இட்லி அவிப்பார்கள்.. எடுக்க எடுக்க சூடான இட்லிகள் விற்றுத் தீர்ந்து கொண்டே இருக்கும்.. குறைந்த விலையில் வாய்க்கு ருசியான இட்லிகளை இரண்டு வகை சட்னிகளோடும், சாம்பாரோடும் வழங்கும் அன்னபூரணிகள் நிறைந்த நகரம் மதுரை மாநகரம்..
"நம்ம ஊரப் போல வருமா சார்..?" பெருமையுடன் சொன்னாள் மீனா..
"அதத்தான் சொல்றேன்.. காஷ்மீருக்கே போனாலும் ஒருவாரம் இருக்கலாம்.. ரெண்டு வாரம் இருக்கலாம்.. அதுக்கு மேலே இருக்க முடியாதும்மா.. மதுரையோட நினைப்பு இருக்க விடாது.. ஆனா இழுத்துக்கிட்டு வந்துரும்.. நம்ம ஊரு சொர்க்கமுல்ல.."
"ஆமா சார்.."
"அதனாலதான் சொல்றேன்.. நீ நம்ம முதலாளிகிட்ட பேசு.."
"என்னத்தைப் பேசச் சொல்றிங்க..?"
"வேலையில மாறுதல் வேணும்னு பேசும்மா.."
"வேலையில மாறுதலா..? இந்த வேலையை விட்டு வேற எந்த வேலைக்கு மாறச்சொல்றிங்க சார்..?"
"அட என்னம்மா நீ.. புரியாத பொண்ணா இருக்கிற.. நான் வேலையில மாறுதல் கேளுன்னு சொன்னது ஊரு விட்டு ஊரு மாறுகிற மாறுதல்ம்மா.. வேற வேலைக்கான மாறுதல் இல்ல.. நீயேன் ஐயாவோட ஊருக்கு மாறுதல் கேட்கக் கூடாது..?"
விஷ்வா சொன்னதைத்தான் ஆறுமுகமும் சொல்கிறார்.. மீனாவின் மனதில் இருக்கும் சந்தேகம் அவரிடம் இல்லை என்பதில் மீனாவுக்குள் குற்றஉணர்வு வந்தது..
வயதில் பெரிய மனிதர்.. ஒழுக்கமானவர்.. விஷ்வாவை நம்புகிறார்.. அவனைப் பற்றி நல்லவிதமாகச் சொல்கிறார்.. மீனாவுக்கு மட்டும் ஏன் குதர்க்கமாகவே நினைக்கத் தோன்றுகிறது..?
"ஊரு விட்டு ஊரு போகிறதுன்னா எப்புடி சார்..?"
"அறியாதவங்க ஊருக்கா போகப் போகிற..? நம்ம முதலாளியோட ஊருதானேம்மா.."
"அவர் மட்டும் அறிந்தவரா..?"
'வெடுக்' கென கேட்ட மீனாவை ஆட்சேபத்துடன் பார்த்தார் ஆறுமுகம்..
"ம்ப்ச்.. இப்படிப்பட்ட பேச்சை மத்தவங்க பேசலாம்.. நீ பேசலாமா..?"
"சார்..?"
"உன்னை தெரியாத பொண்ணு, அறியாத குடும்பம்ன்னா அவரு நினைச்சாரு..? தன்கிட்ட வேல பாக்குற பொண்ணுன்னு கரிசனம் காட்டினாரேம்மா.. ஆபத்தில உதவ சொந்தக்காரனே யோசிப்பான்.. இவர் யோசிக்காம அஞ்சு லட்சத்தைத் தூக்கிக் கொடுத்தாரேம்மா.. உன் அப்பாவைப் பார்க்க இப்பவும் ஆஸ்பத்திரிக்க வர்றாரே.. இதெல்லாம் எதுக்காகம்மா..? எந்த நன்றியை மறந்தாலும் மறக்கலாம்.. செய்நன்றியை மறக்கக் கூடாதுன்னு நான் சொல்லலை.. வள்ளுவரு சொல்லியிருக்காரு.."
"நன்றியோட இருக்கிறது வேற சார்.. அதுக்காக தப்பான நடத்தை இருக்கிறவரை நம்பறதுங்கிறது வேற சார்.."
ஆறுமுகம் இமைக்காமல் மீனாவைக் கண்டனப் பார்வை பார்த்தார்..
"அய்யாவைப் பத்தின சொந்த விசயம் உனக்குத் தெரிஞ்சிருக்கு போல.."
"உங்களுக்கும் தெரியுமா..?"
"தெரியும்.. எனக்கெதுக்கு அது..? என் வேலையை நான் செய்கிறேன்.. அதுக்கான அதிகப்படி சம்பளத்தையும், மதிப்பு, மரியாதையையும் அவர் கொடுக்கிறார்.. மத்தபடி அவரோட பழக்க வழக்கத்தைப் பத்திப் பேச நமக்கென்ன உரிமையிருக்கு..? நம்மகிட்ட எப்படி நடந்துக்கிறாரு.. அத மட்டும்தான் நாம பாக்கனும்.. இத்தனை நாளா இங்கே இருக்காரே.. மாலில அவரோட ப்ளோரில என்ன வேணும்னாலும் செய்யலாம்.. ஏன்னு யாரும் கேக்க முடியுமா..? ஏன் செய்யல..?" 
'ஏன் செய்யல..?' விழித்தாள் மீனாம்பிகை..
'உத்தமன் வேசம் கட்டறானா..?'
"இங்கே யாருக்காக அவரு உத்தமன் வேசம் கட்டனும்..? ஒரு பாட்டிலு வந்ததில்ல.. தப்பானவங்க காலடித்தடம் பட்தில்ல.. கோவிலப் போல மால வைச்சிருக்கார்.. அப்படிப்பட்டவரைப் போயி நீ பட்டுன்னு பேசிட்டியேம்மா.. அவங்க வீட்டப் பத்தியும் இப்படித்தான் பேசின.. உனக்குப் பக்குவம் போதாது மீனா.."
என்றும் கடிந்து கொள்ளாதவர் கடிந்து பேசி விட்டதில் மீனாவின் கண்கள் கலங்கி விட்டன.. இமைகளைச் சிமிட்டிக் கண்ணீரை அடக்கிக் கொண்டாள்..
"நீ கானகிரி எஸ்டேட்டுக்கு மாறுதல் வாங்கிட்டுப் போயிட்டா என் பாடு திண்டாட்டம்தான்.. அதுக்காக சுயநலம் பிடிச்சு உன்னை இங்கேயே நிப்பாட்டி வைச்சா.. மூர்த்தியோட உடம்பு சரியாகுமா..? அவன் முழுசாக் குணமாகனும்னா இது ஒன்னுதான் வழி.. நீ தைரியமா முதலாளிகிட்டப் பேசு.. பேய்க்கும் தேவதைக்கும் வித்தியாசம் தெரியாத மனுசரா நம்ம அய்யா..? இல்லம்மா.. அவரு தெய்வம்.. தெய்வத்த சந்தேகப்படாதே.. இத்தன நாளா இங்க இருக்கியே.. தப்பா ஒரு பார்வை பார்த்திருப்பாரா..? அவரோட உறவுக்காரப் பொண்ணு இருக்கிறப்பதான் உன்னைக் காரில கூப்பிட்டுக்கிட்டுப் போனாரு.. தனியா ஊரைச் சுற்றிக் காட்டுன்னு கூப்பிட்டாரா..?"
ஆறுமுகம் விட்டு விளாசித் தள்ளியதில் வாயை மூடிக் கொண்டாள் மீனா.. மாலையில் மருத்துவமனைக்கு சென்றபோது மூர்த்தி கட்டிலில் உட்கார்ந்திருந்தார்.. அவரது சோர்ந்த தோற்றத்தில் மீனாவுக்குள் பயம் வந்தது.. அவளுக்கு அப்பா வேண்டும்.. அவளுக்கு மட்டுமல்ல.. மோகனாவுக்கும் தான்.. புனிதாவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.. அவளது பலம் மூர்த்தியிடம்தான் ஒளிந்திருக்கிறது..
"என்னம்மா.. என்னவோ போல இருக்கிற..?" பரிவுடன் கேட்டார் மூர்த்தி..
தன் நோயை மறந்து, மகளின் சோர்வைக் கவனிக்கும்  தந்தையை விடவா மீனாவின் பிடிவாதம் பெரிது..?
மீனா முடிவு செய்து விட்டாள்.. மூர்த்தியைப் பார்த்து..
"ஒன்றுமில்லைப்பா.. எனக்கு கானாடுகிரி எஸ்டேட்டுக்கு டிரான்ஸ்பர் வந்திருக்கு.. அங்கே நமக்கு குவார்ட்டர்ஸ் கொடுப்பாங்களாம்.. ஒரு வாரத்தில நாம மதுரையை விட்டுக் கிளம்பியாகனும்.." என்று தெளிவான குரலில் கூறினாள்..

No comments:

Post a Comment