பொதிகையிலே பூத்தவளே -20

20

"என்னுடன் வருகிறாயா..?"
ஆழ்ந்த குரலில் கேட்டான் விஷ்வா.. உடல் தூக்கிப் போட அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள் மீனா..
'கடைசியில் கேட்டே விட்டானா..இதைத்தான் கேட்பான்னு நினைத்தேன்.. ஊடே நல்லவன் வேசம் கட்டினதில அப்படி எதுவும் இருக்காதுன்னு என்னை நானே திட்டிக்கிட்டேனே.. இல்லை.. நீ நினைத்தது சரிதான்னு கேட்டு விட்டானே..'
மீனாவின் விழிகளில் தெரிந்த அதிர்ச்சியையும் வெறுப்பையும் ஊன்றிப் பார்த்தவன் இகழ்ச்சியாக உதட்டை வளைத்தான்..
'இந்தப் பார்வையை நானில்ல பார்க்கனும்..மனதுக்குள் வெகுண்டாள் மீனா..
"என்னைப் பற்றிய உயர்ந்த அபிப்ராயத்தை மாற்றிக் கொள்ளவே மாட்டாயா..?" நிதானமாகக் கேட்டான் விஷ்வா.
'இப்படி இவனால் இப்படிப்பட்டக் கேள்வியைக் கேட்டு விட்டு நல்லவன் வேசம் கட்ட முடிகிறது..?'
"காமாலை நோய் தாக்கினால் காண்பதெல்லாம் யெல்லோ கலர்தான் மீனா.. கொஞ்சம் உன் மனதை விசாலமாக்கு.. குறுகிய வட்டத்தை விட்டு வெளியில் வா.."
"எப்படி..என் குடும்ப கௌரவம்மானம் மரியாதைங்கிற குறுகிய வட்டத்தை விட்டுவிட்டு அந்த மேகியைப் போல விசாலமான மனதோடு வீட்டுப்படியைத் தாண்டி வெளியில் வரச் சொல்றிங்களா..?"
அவனை விட நிதானமாகவே கேட்டாள் மீனா.. விஷ்வாவின் முகத்தில் கோபத்தின் ஜ்வாலை.. மீனாவின் மனதில் திருப்தி..
'இப்ப எப்படி இருக்கு..நல்லவன் வேசமா கட்டற..யாருகிட்ட..?'
"ஷட்டப் மீனாம்பிகை.."
"சாருக்கு என்னோட முழுப்பெயர்கூட ஞாபகம் இருக்கா..இப்படியே கூப்பிடுங்க சார்.. மீனாங்கிறதை விட மீனாம்பிகைன்னு கூப்பிட்டா வேற மாதிரி கூப்பிடத் தோணாது.."
இடக்காகப் பேசியவளை எரிச்சலுடன் பார்த்தான் விஷ்வா..
"உனக்கு வேறு மாதிரி பேசத் தெரியாதா..?"
"உங்களை மாதிரி ஆளுககிட்ட வேற மாதிரி பேசத் தெரியாது சார்.."
"என்னை மாதிரின்னா..எந்த மாதிரி..வாட்'ஸ் தி மீனிங்..?"
"மீனிங்க எல்லாம் இந்த மீனாகிட்ட கேட்டா எப்படி..?"
"வேற யாருகிட்டக் கேட்கணும்..?"
அவளைப் போலவே பேசிக் காட்டினான் விஷ்வா.. அதை ரசிக்கும் மனநிலையில் மீனா இல்லை.. கொதிப்புடன் இருந்தாள்.
"ஊம்.. அந்த மேகிகிட்டக் கேட்கணும்.." நொடித்தாள்..
"நீ மேகியை விடவே மாட்டியா..?" விஷ்வா சீறினான்..
"ஏன் விடனும்..எதுக்கு விடனும்..அவளைப் போல ஆளுககிட்டு பழக்கம் வைச்சுக்கிட்டதாலதான மத்தவங்களயும் கூப்பிடத் தோணுது.."
"ச்சே..! வல்கர் வேர்டை யூஸ் பண்ணாதே.. கேட்கவே என்னவோ போல இருக்கு.. பேசுவதற்கு முன் யோசித்துப் பேச மாட்டியா..?"
"சாரே..! வேதாளம் தேவாரம் ஓதக்கூடாது சாரே.. வல்கராப் பேசறதப் பத்தி சார் டியூசன் எடுக்கக் கூடாது.. அதுவும் என்கிட்ட.. அதுசரி.. மேகி மாதிரி ஆளுககூட ஊரச் சுத்தறவளுக்கு ஆளுகளோட தராதரத்தப் பத்தி என்னத்த தெரியும்..கால் வயித்துக்குக் கஞ்சி குடிச்சாலும் அத கௌரவமாக் குடிக்கனுமுன்னு நினைக்கிற ஆளுக சாரே நாங்க.. வாயிருக்கிறதுங்கிறதுக்காக வர்றியான்னு கேட்டுறக் கூடாது.. எக்குத்தப்பா ஆகிரும் சொல்லிட்டேன்.."
"இம்சை.." விஷ்வா நெற்றியைப் பிடித்துக் கொண்டு திட்டினான்..
"என்னது..இம்சையா..யாரு இம்சை..நீங்களா.. இல்லை நானா..?"
"நீதான்.. எதைச் சொன்னாலும் என்ன ஏதுன்னு யோசித்துப் பேசனும்.. சடனாப் பேசிவிடக் கூடாது.. உன்னைச் சொல்லிக் குற்றமில்லை.. நீ இப்படித்தான் என்கிற முடிவோடு இருக்கிற.. உனக்குச் சொல்லிப் புரிய வைக்கிறது கஷ்டம்.."
"அந்தக் கஷ்டம் உங்களுக்கு எதுக்கு..?"
"மனது கேட்கலை.. ஹில் ஸ்டேசனில் இருந்தா உன் அப்பாவோட ஹெல்த் கண்டிசனுக்கு நல்லதுன்னு நீதானே சொன்ன..?"
"அதுக்கு..இப்படித்தான் கேட்பீங்களா..?"
"ஏய்ய்.. புரியாம பேசக் கூடாது.. என்னோடு வருகிறாயான்னு உன்னை மட்டும் கூப்பிடலை.. உன் குடும்பத்தையும் சேர்த்துத்தான் கூப்பிட்டேன்.."
"சுத்தம்.. இது மொதக் கேட்டதவிட அசிங்கம்.. என் குடும்பத்தாளுகள என்னன்னு நினைத்தீங்க..?"
"எதுவும் நினைக்கலை.."
"அப்பாவுக்கு உடம்பு சரியில்லைதான்.. அதுக்காக தப்பான வாழ்க்கையை நான் வாழ்ந்து அப்பாவைக் காப்பாத்தனும்னு என்னைப் பெத்தவங்க நினைக்க மாட்டாங்க.. வெட்டிப் போட்டிருவாங்க.."
"அடச்சீ..! உன்னிடம் மனிதன் பேசுவானா..?"
விஷ்வா கோபத்துடன் எழுந்து விட்டான்.. அவனது ருத்ராவேசத்தில் நடுங்கிப் போய் பின்னால் நகர்ந்தாள் மீனா.
"என் கூட தப்பான வாழ்க்கை வாழ உன்னைக் கூப்பிடலை.. என் செக்கரட்டரியா வேலை செய்ய வான்னுதான் கூப்பிட்டேன்.."
"அந்த வேலையைத்தான் இங்கே பார்க்கிறேனே.." தாழ்ந்த குரலில் முணுமுணுத்தாள் மீனா..
அவன் ஒன்றும் தவறாகச் சொல்லி விடவில்லை என்பதில் அவளது ஆழ்மனதில் ஏன் ஆறுதல் உண்டாக வேண்டும்..அவளை அவன் தப்பாக அழைக்கவில்லை என்பது உண்மைதான்.. ஆனால் அவன் தப்பான நடத்தையுள்ளவன் என்பது உண்மைதானே..
"அதே வேலையை என் எஸ்டேட்டிலும் பார்க்கலாமே.."
"உங்கள் எஸ்டேட்டா..?"
"யெஸ்.. குன்னூர் மலைப்பகுதியில்.. 'யாழிசைஎஸ்டேட்.. என்னுடைய எஸ்டேட்.. அங்கே வருகிறாயான்னுதான் கேட்டேன்.. உனக்கு குவார்ட்டர்ஸ் உண்டு.. உன் குடும்பம் அங்கே ஸ்டே பண்ணிக்கலாம்.. குன்னூர் கான்வென்டில் உன் தங்கை படிக்கலாம்.."
கேட்க நன்றாகத்தான் இருந்தது.. ஆனாலும் அவனை நம்பி ஊர் விட்டு ஊர் பயணிக்கத் தயக்கமாக இருந்தது.. அவள் பிறந்ததிலிருந்து அறிந்த வீடுதெருஊர்மக்கள் மீனாட்சியம்மன் கோவில்மாரியம்மன் தெப்பக்குளம்.. இத்தனையையும் விட்டு ஏதோ ஓர் மலைப்பகுதிக்குப் போவதா..?
"என்ன யோசிக்கிற..ஏதேனும் ஓர் மலைப் பிரதேசத்தில் வேலை வாங்கிக் கொடுக்க முடியுமான்னு நீதானே கேட்ட.. அறியாதவர்களிடம் வேலைக்குப் போவதிற்குப் பதில் அறிந்த என்னிடம் வேலை பார்க்கலாமே.. நான் கெட்டவன்தான்.. பட்நான் கெட்டவன்னு உனக்குத் தெரியும்.. மத்த வொயிட் காலர் பெர்சனைப் பத்தியும் முகமூடிக்குப் பின்னால் இருக்கும் அவர்களின் உண்மையான முகங்கள் பற்றியும் உனக்குத் தெரியாதே.."
மீனா நகத்தைக் கடித்துக் கொண்டு பேசாமல் இருந்தாள்..
"இன்னும் என்ன யோசனை..உன் பாஷையில் சொல்வதாக இருந்தால் தெரியாத தேவனைவிட தெரிந்த டெவிலே மேல்.. இல்லையா..?"
விஷ்வா வரிசைப் பற்கள் தெரிய சிரித்தான்.. இப்படிக் கனிவுடன் பேசுபவனிடம் தப்பானவன் என்று சொல்லி தள்ளி நிற்பது அவளுக்குச் சிரமமாக இருந்தது.. மனம் புண்பட அவள் பேசுகிறாள்.. அவனோ அவற்றையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் பேசுகிறான்..
மீனாவின் மனதில் ஆனந்தனின் நினைவு வந்தது.. அவளுக்கு அண்ணன் அவன்.. குடும்பத்தின் தலைமகன்.. அவனை வளர்த்துப் படிக்க வைத்து ஆளாக்கும் பொறுப்பை மூர்த்தியின் தலையில் சுமத்தினான்.. அவரைக் காப்பாற்ற வேண்டிய இன்றைய நிலையில் எங்கே இருக்கிறான் என்றே தெரியவில்லை.. குடும்பத்தின் தலைமகனாக அவன் பொறுப்பை ஏற்று அவர்களுடன் இருந்திருந்தால் மீனா இப்படிக் கலங்கிப் போய் நின்றிருப்பாளா..?
"இப்போதே பதில் சொல்ல வேண்டாம்.. நன்றாக யோசித்துப் பதில் சொல்லு.. என் எஸ்டேட்டிற்கு வர விருப்பமில்லையென்றால் என் நண்பன் ஒருவன் கேரளாவில் இருக்கிறான்.. அவனுடைய எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலைக்கு ஏற்பாடு செய்கிறேன்.. கேரளாவும் ஹில் ஸ்டேசன்தான்.. நோ பிராப்ளம்.."
விஷ்வா அவள் போகலாம் என்பதற்கு அறிகுறியாக தலையை அசைத்தான்.. குழப்பத்துடன் வெளியில் வந்தாள் மீனா.. மனம் அலை பாய்ந்தது.. ஒரு முடிவும் எடுக்க முடியவில்லை.. சோர்வுடன் கம்யூட்டரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது ஆறுமுகம் அங்கே வந்தார்.. மீனாவின் சோர்ந்த தோற்றத்தைப் பார்த்தவருக்கு இரக்கமாக இருந்தது..
'சின்னப்புள்ள.. பாவம்.. குருவி தலயில பனங்காய சுமக்கிறதப் போலக் குடும்பச் சுமயத் தலயில ஏத்திக்கிட்டுத் தள்ளமாறுது.. மூர்த்தி நடயுடையா இருந்தாலாவது பரவாயில்ல.. சீக்கில விழுந்துட்டான்.. முதலாளி நல்ல மனசோட உதவி பண்ணப் போயி உயிர் பிழச்சிருக்கான்.. இல்லேன்னா இந்தப் புள்ள என்ன ஆகியிருக்கும்..'
பக்கத்தில் இருந்த சேரில் உட்கார்ந்தார்.. மீனா நிமிர்ந்து பார்த்தாள்..
"ஏம்மா.. சோர்ந்து போயிருக்கிற..?" கனிவுடன் கேட்டார் ஆறுமுகம்..
மீனாவின் கண்கள் கலங்கி விட்டன.. அறதலாக வார்த்தைகளைத் தேடித்தான் பேதை மனங்கள் அலைபாய்கின்றன.. வைரம் பாய்ந்த நெஞ்சிருந்தால் வாழ்க்கையை ஜெயிக்கலாம்தான்.. அதற்கான விதி இருக்க வேண்டுமே.. காலம் கை கொடுக்க வேண்டுமே.. தன் நீர் மீது அல்லாடும் ஓடம் போல் வாழ்வமைந்தால் கரை சேரத்தானே மனம் துடிக்கும்..?
"கண் கலங்காதே மீனா.. அதான் அப்பா பிழைச்சுட்டாரில்ல.. மனச விடக்கூடாதும்மா.. நோயில விழுந்து மறு பிழைப்பு பொழைச்சு வந்திருக்காரு.. தேறிவர நாளாகும்.. அதுக்காக சின்னப் புள்ளை போல அழுகறியேம்மா.. எம்புட்டுத் தைரியமான பொண்ணு நீ.. இப்படிச் சோர்ந்து உட்காரலாமா..?"
"இல்லை சார்.. அப்பாவுக்கு உடம்பு சரியாகனும்னா ஏதாச்சும் மலைபிரதேசத்தில இருக்கனுமாம்.. மாத்திரைமருந்துன்னா வாங்கிக் கொடுத்துர முடியும்.. மலை பிரதேசத்துக்கு எங்கே போகிறது..?"
"அப்படியா டாக்டர் சொல்றாரு..?"
ஆறுமுகம் யோசனையில் ஆழ்ந்தார்.. அவர் யோசித்து எந்த ஆணியை பிடுங்கி விடப் போகிறார் என்ற சலிப்புத் தட்டியது மீனாவுக்கு.. ஆனாலும் ஆறுதலாக பேசுபவரிடம் சலிப்பைக் காட்டுவது முறையல்லவே..
"நீ முதலாளிகிட்டக் கேட்டியாம்மா..?"
ஆறுமுகத்தின் கேள்வியில் மீனாவுக்கு தூக்கிவாரிப் போட்டது.. ஒருவேளை விஷ்வாவிடம் அவள் கேட்டது இவருக்குத் தெரிந்திருக்குமோ..
"அவரிடம் இதைக் கேட்டு என்ன பண்ண சார்..?" அசட்டை போல பதில் சொன்னாள்..
"என்னம்மாஇப்படிச் சொல்லிப்புட்ட.. நம்ம முதலாளியோட சொந்த ஊரே மலைநாடுதானேம்மா.."
"மலைநாடா..?"
"ஆமாம்மா.. மலை நாடுதான்.. மலைமேல இருக்கிற பெரிய ஊரும்மாநம்ம முதலாளியோட ஊரு.. கானாடுகிரிங்கிறது ஊரோட பேருன்னாலும் நாங்க மலைநாடுன்னுதான் சொல்லுவோம்.. அய்யாவோட குடும்பம் ஜமீன் குடும்பம்.."
"குடும்பமா..?"
"குடும்பம்தான்.. பரம்பரையா அந்த ஊரை ஆண்ட ஜமீன் குடும்பம்.. நம்ம முதலாளியோட தாத்தா பெயர் சொக்கநாதன்அப்பா பெயர் கோபிநாதன்அண்ணன் பெயர் ரங்கநாதன்.."
"அதுசரி.. குடும்பமே நாதன்னு முடிகிறதைப் போல பேரை வைச்சிருக்கு.. அண்ணனுக்குப் புள்ளை இருக்கா சார்.."
"கரெக்டாச் சொன்னம்மா.. சின்னப் பையன்.. நாலு வயசிருக்கும்.."
"அவன் பெயர் எந்த நாதனாம்..?"
"ராமநாதன்.."
"அப்படிப் போடு அருவாளை.."
"அய்யாவோட குலதெய்வம் சொக்கநாதனும்மீனாட்சியும்தான்.. இந்த மதுரை மண்ணில இருந்து மலையாள போன வம்சமாம் முதலாளியோட வம்சம்.. வருசாவருசம் மதுரைக்கு வந்து மீனாட்சி சொக்கநாதரைக் கும்பிட்டுப் போகும் குடும்பம்.. அதனாலதான் அய்யா இங்கே இவ்வளவு பெரிய மாலையே கட்டினார்.."
"ஓஹோ.."
"இங்கே பிடிமண் எடுத்துட்டுப் போயி கானாடுகிரியில மீனாட்சி சொக்கநாதரோட கோவிலைக் கட்டியிருக்காங்க.. அய்யாவோட அம்மா கோகிலவாணி மீனாட்சியம்மனின் பக்தை.."
"இவருக்கு அண்ணன் மட்டும்தானா..?"
"ஒரு தங்கச்சியும் இருக்கும்மா.. ரூபிணின்னு பேரு.. நான் எத்தனை தடவை மலைநாட்டுக்குப் போயிருப்பேன் தெரியுமா..?"
"நீங்க முதலாளியைப் பார்க்கப் போறிங்கன்னு தெரியும்.. ஆனா.. இப்படியொரு வளநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னு இப்பத்தானே தெரியுது.."
"வளநாடு இல்லம்மா.. மலநாடு.."
"என்னவோ ஒரு நாடு.. விடுங்க சார்.. அங்கே எல்லோரும் கூட்டுக்குடும்பமா இருக்காங்களா..?"
"எஸ்டேட்டுகளும் சொத்துக்களும்தான் தனித்தனி.. இருக்கிறது ஒரே அரண்மனையில கூட்டுக் குடும்பமாத்தான்.."
அப்பாடி என்றிருந்தது மீனாவுக்கு.. அவள் நினைத்துப் பயந்ததைப் போல விஷ்வா ஒன்றும் தனியாக இருக்கவில்லை.. குடும்பத்துடன்தான் இருக்கிறான்.. அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டால்தான் என்ன..?

No comments:

Post a Comment