பொதிகையிலே பூத்தவளே -22


22

"எனக்குச் சம்மதம்.."
விஷ்வா இருந்த தளத்தின் மேற்கூரையைப் பார்த்தபடி மொட்டையாகச் சொன்னாள் மீனா.. அவளை நிமிர்ந்து பார்த்த விஷ்வாவின் இதழ்களில் இளநகை.. குழந்தையின் கோபத்தை ரசிக்கும் குறும்புப் பார்வையுடன் அவளை  ஊன்றிப் பார்த்தபடி..
"வாட் ஃபார்..?" என்று அறியாதவன் போலக் கேட்டான்..
"ஊம்..? எதுக்கா..? உங்க எஸ்டேட்டில் வேலை செய்ய மட்டும் தான் சம்மதம்ன்னு சொன்னேன்.." சீறினாள் மீனா..
"ஒன் ஸ்மால் கரெக்சன் மிஸ் மீனாம்பிகை.. என் எஸ்டேட்டில் வேலை செய்ய மட்டும் உங்களை அப்பாயிண்ட் பண்ணலை.. எனக்குச் செக்கரட்டரியா.. ஐ மீன்.. பிஏவா.. உங்களை அப்பாயிண்ட் பண்ணியிருக்கேன்.." அமர்த்தலாகச் சொன்னான் விஷ்வா...
"தானிக்குப் பேரு ஏமி..?"
"தானிக்கும் தீனிக்கும் நேம் வேறுவேறு மிஸ் மீனாம்பிகை.. எஸ்டேட்டில் வேலை பார்க்கிறதில இரண்டு வகை இருக்கு.. நம்பர் ஒன் ஃபீல்டில் இறங்கி வேலை பார்க்கிறது.. இரண்டாவது ஆபிஸ் வொர்க்.. யு நோ.. நான் ஓரிடத்தில் அடங்கி உட்கார முடியாது.."
"நீங்க ஓரிடத்தில மட்டும் அடங்க மாட்டிங்கங்கிறது உலகம் அறிஞ்ச விசயமாச்சே எம்.டி சார்.."
குத்தலாகச் சொன்னாள் மீனா.. அவனோ, அந்தக் குத்தல் மொழியால் பாதிக்கப் படாதவனாக அவளை உன்னிப்பாகப் பார்த்து வைத்துத் தடுமாற வைத்தான்..
"சில சமயம் நம் கால்குலேசன் தவறாகவும் இருக்கலாம் மீனா.. ஓவர் காண்பிடண்ட் வைத்துக்காதீங்க.."
"எனக்குக் காண்பிடெண்டே இல்லை சார்.. இருந்தால் தானே ஓவர் காண்பிடெண்ட்டக் காட்டப் போறேன்..? நான் ஓய்ந்து போயிருக்கிறேன்.."
மீனா துயரத்துடன் சொன்னாள்.. விஷ்வாவின் மனம் வலித்தது.. எதிரே நின்ற அழகுக் கன்னிகை அவளது அழகை உணராத இயல்புடன் அவனைக் கவர்ந்தாள்.. அவனைக் கவர அவள் எவ்வித முயற்சியையும் மேற்கொண்டதில்லை.. மாறாக அவன் முன் வருவதைத் தவிர்ப்பவள்.. துள்ளித் திரிய வேண்டிய இளம்பருவத்தில் குடும்பத்தின் சுமையைத் தன் தோள்களில் தாங்கிக் கொண்டிருப்பவள்..
அவள் ஓடி ஓடிக் களைத்துப் போய் ஓய்ந்து ஒடுங்கியிருக்கும் தோற்றத்துடன்தான் நின்றிருந்தாள்.. கலைந்து காதோரம் பிய்ந்து தொங்கிய கூந்தலை சரிப் படுத்திக் கொள்ள அவள் முனையவில்லை.. வீட்டிலிருந்து மருத்துவமனை.. மருத்துவமனையிலிருந்து மால்.. என இரண்டு பஸ்கள் மாறிக் கூட்டத்தில் நெறிபட்டு வந்ததில் கசங்கிப் போயிருந்த சேலையை நீவி விட வேண்டும் என்ற நினைவும் அவளிடம் இல்லை..
விஷ்வா அறிந்திருந்த பெண்கள் வேறு ரகம்.. அவனது உறவினர் வட்டாரங்களில் கோடிஸ்வரப் பாரம்பர்யம் கொண்ட குடும்பங்களில் பிறந்த பெண்கள், அவனது பார்வையில் படுவதைப் போல இங்கும் அங்கும் நடப்பார்கள்.. அவனது கவனத்தை ஈர்க்கும் வகையில் 'கலீர்' எனச் சிரித்துப் பேசுவார்கள்.. அவன் அவர்களைக் கவனிக்கிறானா என்று ஓரவிழிப் பார்வை பார்த்து உறுதி செய்து கொள்வார்கள்.. சந்தர்ப்பங்களை உருவாக்கி அவனிடம் பேசிப் பழகுவார்கள்.. பேசும் போது ஓயில் காண்பிப்பார்கள்.. நாசுக்கு, நாகரிகத்தைப் பிரதிபலிப்பார்கள்..
உறவினர் அல்லாத வேறுவகையானவர்கள் அவனது பணத்திற்காக பல்லைக் காட்டுபவர்கள்.. கவர்ச்சியாக உடையணிந்து அவனது கவனத்தைக் கவர்வார்கள்.. தொட்டுப் பேசுவார்கள்.. நெருக்கம் காண்பிப்பார்கள்.. இன்னும்.. இன்னும்..
விஷ்வா பெருமூச்சு விட்டான்.. அவன் ஒன்றும் முனிவன் அல்ல.. உலகம் சுற்றும் வாலிபன்.. அவனிடமிருந்த பணம் தேவையாக இருந்த பெண்களிடம் இவனது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டான்.. இதோ.. எதிரே நிற்கிறாளே.. கோவில் நந்தவனப் பூக்களின் அழகை தன்னகத்தே கொண்ட யட்சக்கன்னிகை..! இவள் போல ஒரு பெண்ணை இதற்கு முன் அவன் கண்டதில்லையே..
மீனாம்பிகை நேர்மையின் திருவுருவாக இருந்தாள்.. அவனது கவர்ச்சியான தோற்றத்தில் அவளது கன்னி மனம் தடுமாறினாலும், மனதை அடக்கி வெல்லும் மகாசக்தியாக, ஒளிப்பிழம்பாக அவன் முன் நின்றாள்.. இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நியதிகளுடன் போர் வாளேந்தி அவனை எச்சரித்தாள்..
"களைத்துப் போனவங்க இளைப்பாறத்தான் கானாடுகிரி மலை இருக்கு.. டோன்ட் வொர்ரி.. அங்கே உன் அப்பாவுக்கும், உன் குடும்பத்துக்கும், உனக்கும் ஓய்வு கிடைக்கும்.." பரிவுடன் சொன்னான் விஷ்வா..
அவனது பரிவை மீனா விரும்பவில்லை.. அவனுடன் இணக்கமாகப் பேச அவளுக்குப் பயமாக இருந்தது.. அவன் ஆள் மயக்கும் மாயாவியாக இருந்தான்.. எப்போது அவன் மதுரையை விட்டுத் தொலைவான் எப்போது அவன் விரித்து வைத்திருக்கும் மாய வலையிலிருந்து வெளி வரலாம் என்று காத்துக் கிடந்தவள் அவள்.. இன்று விலக முடியாத அந்த மாயவலையில் மென்மேலும் சிக்கப் போகிறாள்..
"எனக்கொன்னும் ஓய்வு தேவையில்லைசார்.. உக்காந்து சாப்பிடவோ இல்ல ஊர்சுத்திப் பாக்கவோ நான் அங்க வரல.. வேல செய்ய வர்றேன்.. அதனால, மலைஎஸ்டேட்டில ஊஞ்சலாடு, நானு தாலாட்டுப் பாடறேன்னு வசனம் பேச வேணாம்.." படபடத்தாள் மீனா..
"ஊம்..?" தாடையைத் தடவியபடி குறுநகை புரிந்தான் விஷ்வா..
"இந்தப் பார்வையெல்லாம் இங்கே வேணாம் சார்.. எங்கப்பாவுக்காகத்தான் ஊர் விட்டு ஊர் மாறி வேலை செய்ய ஒப்புக்கிட்டு வர்றேன்.. எனக்குப் பிடிக்காம இத்தனூண்டு சம்பவம் நடந்தாலும் அடுத்த நிமிசமே உங்க வேலை வேணாம்ன்னு தூக்கிப் போட்டுட்டுத் திரும்பி வந்துருவேன்.." ஆவேசமாக அறிவித்தாள்..
"ஈஸிட்..? அப்புறம் என் ஃபைவ் லேக்ஸ் கடனை எப்படி அடைப்பாய்..?" புருவங்களை உயர்த்தினான் அவன்..
"ஓ.. அதச் சொல்லி மடக்கிப் போடனும்ங்கிற ஐடியா இருக்கா..? கூலி வேல செஞ்சாவது உங்க கடனை அடைப்பேன் சார்.. விட்டிற மாட்டேன்.. அதுக்காக உங்ககிட்ட அடிமையா நிக்க மாட்டேன்.." மீனாவின் உதடுகள் துடித்தன..
"ஈஸி மீனா.." கனிவுடன் சொன்னான் விஷ்வா..
"நீ பயப்படுவதைப் போல எதுவும் நடக்காது.. நான் கேரண்டி கொடுக்கறேன்.. கானாடுகிரியில நான் மட்டும் தனியா இல்லை.. என் ஃபேமிலி இருக்காங்க.. டோன்ட் வொர்ரி.."
மீனாவுக்கு அந்த இடத்திலிருந்து ஓடிவிட வேண்டும்போல இருந்தது.. அவனது கனிவு அவளைக் கரைத்தது.. பலவீனமாக்கியது.. ஆறுதல்தேடி அவன் தோளில் சாய்ந்து விட மனம் துடித்ததில் பேய் விரட்டியதைப் போல அங்கிருந்து ஓடி விட்டாள்..
வீடு வந்து சேரும்வரை அவளது பதட்டம் நிற்கவில்லை.. மகள் வந்து  விட்டதைக் கண்ட புனிதா ஆச்சரியமானாள்.. எப்போதும் மாலை மங்கும் நேரம்தான் மீனா வீட்டுக்குத் திரும்புவாள்.. வீட்டு வேலைகளை முடித்துப் பிள்ளைகள் வந்ததும் கொடுப்பதற்குத் தயாராக பலகாரம் செய்து, பால் காய்ச்சி வைத்துவிட்டு, வாசல் திண்ணையில் உட்கார்ந்து காத்திருப்பாள் புனிதா.. முதலில் மோகனாதான் வருவாள்..
"ஹை.. ஸ்கூல் விட்டிருச்சு.." என்று ஆடியபடி வருபவளை அதட்டி, உடை மாற்றி முகம், கை கால் கழுவி வரும்படி அனுப்பி விட்டுக் காத்திருப்பைத் தொடர்வாள் புனிதா.. முதலில் வந்து விட்டாளே என்று மோகனாவுக்கு மட்டும் பலகாரம் காபி கொடுக்க மாட்டாள்.. கொடுத்தாலும் மோகனா சாப்பிட மாட்டாள்..,
'அக்கா வந்து விடட்டும்மா, சேர்ந்து சாப்பிட்டுக்கறேன்..' என்பாள்..
 மீனா வராமல் மோகனா காபி பலகாரம் சாப்பிட்டதில்லை..
தெருமுனையில் மீனா வரும்போதே புனிதா எழுந்து விடுவாள்.. வாசலில் இறங்கி வரவேற்பாள்.. மீனாவின் முகத்தை வைத்தே அவளது மனநிலையைக் கண்டு பிடித்து விடுவாள்.. ஒருநாள்கூட மீனா நேரம் கடந்தும் வந்ததில்லை.. முந்தியும் வந்ததில்லை..
"என்னம்மா.. இன்னைக்கு சீக்கிரமே வேலை முடிஞ்சிருச்சா..?" என்று மகளைக் கேட்டாள்..
அப்போதுதான் மணியைக் கவனித்தாள் மீனா.. நேரத்தைக்கூடக் கவனிக்காமல் ஓடி வந்திருக்கிறாள்..
"ஆமாம்மா.. மோகனா எங்கே..?"
"இன்னும் வரலை.. நீ போய் டிரஸ் மாத்தி முகம் கைகால் கழுவிட்டு வா.. மோகனா வந்திருவா.."
'அதுக்குள்ள வந்துட்டேனா..?'
மீனாவுக்கு உறுத்தலாக இருந்தது.. கைப்பையை சுவரிலிருந்த ஆணியில் கைப்பையை மாட்டி விட்டு நைட்டிக்கு மாறினாள்.. குளியலறையில் புகுந்து குளிர்ந்த தண்ணீரில் முகம்.. கைகால் கழுவி விட்டு வந்த போது புத்துணர்வு மீண்டிருந்தது..
"ஐ.. அக்கா.." என்று குதித்துக் கொண்டு வந்த மோகனாவைக் கண்டதும் மிச்சம் மீதி இருந்த உறுத்தலும் பறந்து போனது..
"என்னடி.. இப்பத்தான் அக்காவை புதுசாக் கண்டிருக்கியா..?" புனிதா கேலியாக கேட்டாள்..
"அக்காவைக் கண்டதில் சந்தோசமில்லைம்மா.. ஸ்கூல் விட்டாச்சில்ல.. அந்த சந்தோசம்.." தங்கையின் காதைத் திருகியபடி புன்னகைத்தாள் மீனா..
"சரிசரி.. யூனிபார்ம மாத்திட்டு வா.. அக்காவுக்கும் தங்கைக்கும் பலகாரம் காபி தர்றேன்.." விரட்டினாள் புனிதா..
"ஒரு நிமிசம் நிக்கவிட மாட்டிங்களே.." சிணுங்கியபடி உடை மாற்றப் போனாள் மோகனா..
மகளின் முகம் பார்த்த புனிதாவின் முகத்தில் ஏதோ இருந்தது..
"என்னம்மா..?"
"ஒன்னுமில்லயே.. நீ உக்காரு.. காபி கலந்து வைச்சிட்டு வர்றேன்.."
புனிதா சமையலறைக்குள் போய் விட்டாள்.. அவள் எதையோ கேட்க நினைக்கிறாள் என்பது மீனாவுக்குத் தெளிவாகத் தெரிந்தது.. ஆனால் கேட்க மாட்டாள்.. முதலில் மீனாவின் வயிற்றில் எதையாவது போட்டாக வேண்டும்.. பசியடங்க அவள் சாப்பிட்டு முடித்து காபி குடிக்கும் வரை புனிதா எந்த விவரத்தையும் பேச மாட்டாள்..
'அம்மா..' மீனாவின் மனம் நெகிழ்ந்தது..
அந்த மூன்று நாள்களாகத்தான் வீடு வீடாக இருந்தது.. மூர்த்தியை டிஸ்ஜார்ஜ் பண்ணி அழைத்து வந்து விட்டார்கள்.. புனிதா தேனியின் சுறுசுறுப்போடு ஒரே நாளில் வீட்டை ஒழுங்கு செய்து பழைய நிலைக்கு கொண்டு வந்து விட்டாள்.. மீனா வேலை முடித்து நேராக வீட்டுக்குத் திரும்பி வந்தாள்.. பசிக்குச் சாப்பிட்டு ஓய்வெடுத்தாள்.. மோகனா பக்கத்து வீட்டில் காத்திருக்காமல் வீட்டுக்கு ஓடி வந்தாள்.. சூடாக பலகாரம் சாப்பிட்டு விட்டு வீட்டுப் பாடம் எழுதினாள்..
அந்த வீட்டை வீடாக்குவது புனிதாதான் என்பதில் மீனா பெருமூச்சு விட்டாள்.. புனிதாவை புனிதாவாக்குவது  மூர்த்தியாயிற்றே அவர் நன்றாக இருந்தால் மட்டுமே புனிதா உயிர்ப்பாக ஓடியாடி வேலை செய்வாள்..
அவள் மூர்த்திக்கு இரண்டாம் தாரம்தான்.. வீட்டையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள ஒரு பெண் தேவையென்பதால் சம்பளமில்லாத வேலைக்காரியாக இளையதாரம் என்ற பெயரில் அந்த வீட்டில் அடியெடுத்து வைத்தவள்.. முதிர் கன்னியாக இருந்தவளுக்கு ஒர் வாழ்க்கை கிடைத்தது.. ஏற்கனெவே மணமானவர், இரண்டு குழந்தைகளுக்குத் தந்தை, மனைவியை இழந்தவர் என்ற நினைவுகள் ஏதுமின்றி அவளுக்குத் தாலி கட்டிய மூர்த்தியை.. 'இவன் என் கணவன், எனது ஆண், எனக்கு மட்டுமே சொந்தமானவன்' என்று அவள் காதலித்தாள்.. மூர்த்தியின் மீது சிறு துரும்பு பட்டாலும் புனிதாவின் மீது  விழுந்ததைப் போலத் துடித்துப் போவாள்..
மீனாவும் மோகனாவும் காபி பலகாரம் சாப்பிட்டு முடித்ததும் மோகனா வீட்டுப் பாடம் எழுதப் போய் விட்டாள்..
"சொல்லுங்கம்மா.." என்றாள் மீனா..
"நாம் வேறு ஊருக்குப் போகணும்னு சொன்னியே.. ஏம்மா..?"
"அப்பாவுக்காகத்தான்ம்மா.. மலைப் பிரதேசத்தில் இருந்தால் அப்பாவுக்கு நல்லதாம்.. சீக்கிரமா குணமாகிடுவாராம்.. டாக்டர் சொன்னார்.."
"அப்படியா..?" புனிதா கலவரமானாள்..
"பயப்படாதீங்கம்மா.. சுத்தமான காற்றும், தண்ணீரும், வெக்கையில்லாத சூழ்நிலையும் இதய நோயாளிகளுக்கு நல்லதும்மா.. மத்தபடி அப்பா குணமாகிட்டார்.. கவலைப்படாதீங்க.."
"அப்பாவுக்காக முன்பின் தெரியாத ஊரில, முன்பின் தெரியாத ஆளுககிட்ட நீ வேலை பார்க்கனுமே.."
"ஊர்தான் முன்பின் தெரியா ஊர்.. முதலாளி இவர்தானே.."
"ஆமாமில்ல.. நீ டிரான்பர்ன்னுதான சொன்ன.. அப்பச்சரி.. இவர் நல்ல மனிதர்.. ஒரு பயமுமில்லை.." புனிதா நிம்மதியானாள்..
அந்த அளவுக்கு மீனாவின் குடும்பத்தினரிடம் விஷ்வா நல்ல பெயர் வாங்கியிருந்தான்.. அவனிடம் வேலை பார்ப்பது மகளுக்கு பாதுகாப்பு என்று மீனாவைப் பெற்றவர்கள் நம்பினார்கள்..
'இந்த நம்பிக்கையை அவன் காப்பாற்றுவானா..?'

அவன் காப்பாற்றுவது இருக்கட்டும்.. முதலில் அவள் காப்பாற்றுவாளா..? என்ற சந்தேகம் மீனாவின் மனதில் எழுந்தது..

No comments:

Post a Comment