மைவிழியே மயக்கமென்ன ?-133

133
என் பூந்தோட்டமெங்கும்..
பரவிக் கிடக்கும் நறுமணத்தில்...
எதுதான் உந்தன் நறுமணமென்று..
பிரித்துப் பார்க்க துடித்துநின்றேன்...

சாரங்கபாணி கொதிப்பான மனநிலையுடன் இருந்தார்.. அவர் நினைத்தது எதுவும் நடக்கவில்லை.. தீட்டிய திட்டங்கள் எதுவும் நிறைவேறவில்லை.. அவர் கையிலிருந்து நழுவிப் போன அதிகாரத்தை திரும்பவும் அவரால் கைப்பற்ற முடியவில்லை...
எங்கேயோ மறைந்திருந்த ராணி சுமித்ரா தேவி திரும்பி வந்து விட்டாள்.. தனியாக வராமல் அவளுடைய பெரியப்பாவுடனும்.. பெரியப்பா மகனோடும் வந்து இறங்கியிருக் கிறாள்.. போதாக் குறைக்கு.. அவளது காதலன் என்று ஒருவனை கை காட்டிக் கொண்டிருக்கிறாள்..
நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் நின்றுவிட்டது என்று மீடியாவுக்கு பேட்டி கொடுத்து விட்டாள்...
'இந்த ஆனந்தன் ஏன் எதுவும் செய்யாமல் சும்மா இருக்கிறான்...' அவரின் இதயத்துடிப்பு எகிறிக் கொண்டிருந்தது..
"எதுக்கும் நம் சாமான்களை கட்டிவை.. எந்த நிமிசமும் அரண்மனையை விட்டு வெளியேறுன்னு அந்த மகராசி சொல்லித் தொலைப்பா.." மனைவியிடம் அதட்டினார்..
சாரங்கபாணியின் மனைவி.. காஞ்சனா தேவி பதில் சொல்லவில்லை.. எப்போது அவளுடைய மகன் அவளைவிட்டு விலகி ஓடினானோ.. அப்போதிருந்து அவள் யாரோடும் சரியாகப் பேசுவதில்லை...
திடிரென்று மகனின் இருப்பிடம் தெரிந்தது.. சேர்ந்து வாழ முடியாவிட்டாலும்.. மகனின் இருப்பைத் தெரிந்து கொண்டதில் அவளது தாய் மனம் நிறைந்திருந்தது..
சுமித்ராவை மணக்கப் போகிறவன்.. அவளுடைய மகன் என்று தெரிந்தும் தடுத்துச் சொல்ல வாய் வராமல் ஊமையாகிப் போனாள் அவள்...
ஆனால் அவள் மகள் ஊமையாக நின்று விடாமல் சுமித்ராவைக் காப்பாற்றி விட்டதில் அவள் மனதில் மகிழ்ச்சியா.. துயரமா என்று தெரியாத மனநிலைக்குத்தான் அவள் ஆளானாள்...
திரும்பவும் மகன் தலை மறைவாகி விட்ட கவலையில் இருந்தவளுக்கு அரண்மனையில் வாழ்ந்தால் என்ன..? இல்லை.. அடுக்கு மாடிக் குடியிருப்பில் வாழ்ந்தால் தான் என்ன..?
எதுவாக இருந்தாலும்.. அதில் அவள் மனம் ஒட்டப் போவதில்லை...
அன்று அரண்மனையில் விசேச தினத்திற்கான அனைத்து அடையாளங்களும் தென்பட்டன.. புரோகிதர் வந்து ஹாலின் நடுமையத்தில் ஹோமம் வளர்த்துக் கொண்டிருந்தார்.. சுமித்ரா தேவியின் உறவினர்களும்.. நண்பர்களும்.. விருந்தினர் கூட்டமும் வந்து அமர்ந்திருந்தது...
"இங்கே என்னடி நடக்குது..?"
மனைவியைக் கேட்டார்.. வழக்கம் போல அவள் பதில் சொல்லவில்லை...
வேறு யாரிடம் கேட்டாலும் இதே கதைதான் தொடரப் போகிறது என்ற நினைவுடன்.. அறைக்குள் அடைபட்டபடி குறுக்கும்.. நெடுக்கும் நடந்தார்..
அறையின் அழைப்புமணி ஒலித்தது.. வேலையாள் நின்றிருந்தான்..
"ராணி உங்களையும்.. அம்மாவையும் வரச் சொன்னாங்க..."
'பெரிய ராணி...' அவர் மனம் எரிந்தது...
"எதுக்கு அழைக்கிறாளாம்..?"
திரும்பவும் மனைவியைப் பார்த்துக் கேட்டார்.. அவள் எனக்கென்ன என்பது போன்ற பார்வையொன்றை பார்த்து வைத்தாள்...
"கூப்பிடுகிறாளே.. வா.. போகலாம்..."
"நான் வரலை..."
"கூட்டமாய் சொந்த பந்தமும்.. பழகினவங்களும் வந்திருக்காங்க காஞ்சனா.. நாம போகாம இருந்தால் நல்லாயிருக்காது..."
"இப்போது.. எதுதான் நல்லாயிருக்கு.."
"நீ கூடப் பேசக் கத்துகிட்டடி..."
"பேசி என்ன பிரயோசனம்..?"
"நம்ம பேச்சை வந்து பேசிக்கலாம்.. இப்ப நீ வா.."
அவர்கள் ஹாலுக்குள் பிரவேசித்தார்கள்.. புரோகிதரின் முன்னால் அமர்ந்திருந்த சுமித்ரா அவர்களைத் திரும்பிப் பார்த்தாள்...
புரோகிதரின் அருகே இரு மனைப் பலகைகள் போடப் பட்டிருந்தன.. அவைகளில் அவர்களை அமரச் சொன்னார் புரோகிதர்.
எதற்காக என்று தெரியாமல் அவர்களும் அமர்ந்தார்கள்..
உறவினர்களின் வரிசையில்.. பத்மினியும் அமர்ந்திருந்தாள்.. அவளைப் பார்த்த காஞ்சனாவின் மனதில் மெலிதான மனத்தாங்கல் உண்டானது...
'வந்தவள்.. தாய் தகப்பனைப் பார்க்க உள்ளே வராமல் இங்கேயே உட்கார்ந்து விட்டாளே...'
மகளே வந்திருக்கிறாள் என்றால்.. நடக்கப் போகும் விசேசம் என்ன என்று அறிந்துகொள்ளும் ஆவல் அவள் மனதில் குறுகுறுத்தது...
புரோகிதரின் மந்திரங்களை சுமித்ரா சொல்லத்துவங்கினாள்.. அவர்களையும் சில மந்திரங்களை சொல்லச் சொல்லி புரோகிதர் கூற.. அவர்களும் அவற்றை உச்சரித்தார்கள்..
ஹோமத்தின் முடிவில்.. புரோகிதர் சொல்ல.. சொல்ல.. சுமித்ரா தெளிவாக வார்த்தைகளை உச்சரிக்க ஆரம்பித்தாள்...
"ராஜா புவனேந்திர பூபதியின் மகளாகிய ராணி சுமித்ரா தேவியாகிய நான்.. ராஜா மார்த்தாண்ட சாரங்கபாணி பூபதியை என் வளர்ப்புத் தந்தையாக இந்த நொடி முதல் சுவிகரித்துக் கொள்கிறேன்.. இனி இந்த அரண்மனையின் ராஜாவாக அவரது வாழ்நாள் பூராவும் அவர் இருப்பார்..."
சாரங்கபாணிக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை...
அவருடைய எல்லா சதிவேலைகளையும் உடைத்த பெண்சிங்கமான ராணி சுமித்ரா தேவி.. அவரை தன் தந்தையாக தத்தெடுத்துக் கொண்டாளா..?
எப்படி..?
நீ இந்த உலகையே ஆண்டாலும் அதைப்பற்றி எனக்கொன்றுமில்லை என்ற பாவனையில் காஞ்சனாதேவி.. முகத்தில் எந்தவித சலனமுமில்லாமல் ஹோமத்தீயை பார்த்துக் கொண்டிருந்தாள்..
பத்மினி தேவியின் முகத்தில் ஒர் இளக்கம் வந்திருந்தது... தன் அனைத்து அதிகாரங்களையும் தாரை வார்த்து கொடுத்துக் கொண்டிருந்த சுமித்ரா தேவியை பிரியத்துடன் பார்த்தாள் அவள்..
இந்தச் செய்தி.. ஆனந்தனுக்கு எவ்வளவு மகிழ்வைக் கொடுக்கும் என்ற நினைவில் அவளது நெஞ்சம் மிதந்தது...
'இதற்காகத்தானே அண்ணா.. இத்தனை காலமும் நீ போராடினாய்..?' அவள் கண்கள் பனித்தன..
தனது அனைத்துத் தொழில்களுக்கும் கார்டியனாக சட்டப்படி சாரங்கபாணியை நியமித்தாள் சுமித்ரா...
ரகுவீர் சக்கரவர்த்தியும்.. சிபிச்சக்கரவர்த்தியும் அவளுடைய இந்த முடிவை பலமாக ஆட்சேபித்தார்கள்..
"நீ தவறான முடிவை எடுத்துவிட்டாய் சுமித்ரா.."
"இல்லை.. பெரியப்பா.. இதுதான் சரியான முடிவு.."
"உன்னுடையதை எல்லாம் நீ விட்டுக் கொடுத்து விட்டாயே சுமித்ரா..."
"என்னுடையது எதுன்னு நான் தீர்மானம் பண்ணிட்டேன் அண்ணா... எனக்கு அது நிலைத்தா போதும்..."
அவளது மனதை மாற்ற முடியாமல் அவர்கள் மௌனமாகி விட்டார்கள்...
கௌதமின் மனதில் கர்வம் சுரந்து கொண்டிருந்தது..
ராணி என்ற பட்டத்தையும்.. அரண்மனை வாழ்வையும்.. அனைத்து உயரங்களையும்.. அடையாளங்களையும் அவனுக்காக ஒரு நொடியில் துறந்து விட்ட சுமித்ராவை காதலுடன் பார்த்தான் அவன்..
அவன் பார்வையை கண்டு கொண்டவளின் கண்களில் மயக்கம் வந்தது.. அவளது மயக்கத்தை கண்டு அவன் இன்னும் மயங்கிப் போனான்...
"என் சுமி.."
கிடைத்த தனிமையில் அவளைக் கட்டியணைத்த போது அவன் கைகளில் முழுமனதாக ஒன்றிக் கொண்டாள் சுமித்ரா...
"எனக்காக அத்தனையையும் விட்டு விட்டாயேடி.."
"ஊஹீம்.. எனக்காகத்தான் அத்தனையையும் விட்டேன்..."
"உனக்காக விட்டாயா..?"
"ஆமாம்.. எனக்கு கௌதமின் பெண்டாட்டியாகனும்.. மகாதேவன்.. விசாலினிக்கு மருமகளாகனும்.. காவ்யாவுக்கு அண்ணியாகனும்.. ரிஷிக்கும்.. லலிதாவுக்கும் தங்கையாகனும்.. ஸ்ரீராமுக்கு அக்காவாகனும்.. காவ்யாவின் குழந்தைக்கு அத்தையாகனும்.. இத்தனைக்கும் மேலாய் என் தாத்தாவுக்கும்.. பாட்டிக்கும் பேத்தியாகனும்.. அதனால் நான் ராணியாக வேணாம்..."
"சுமி..." அவன் கையணைப்பில் அவள் கண்மூடி நின்றாள்...
சாரங்கபாணியின் மனதிலிருந்த அத்தனை சதியெண்ணங்களும் இருந்த இடம் தெரியாமல் ஓடிப் போய் விட்டன.. அவரை 'அடேய்.. பாதகா..' என்ற ரீதியில் பார்த்து வந்த அனைவரும் 'ராஜா' என்ற மரியாதையைக் கொடுத்ததில் அவர் மனம் குளிர்ந்து போயிருந்தார்...
பத்மினி தேவி கூட இதை ஆதரித்ததில் அவர் மகிழ்ந்து போயிருந்தார்..
அப்போதுதான் தொலைகாட்சியில் அந்த செய்தி ஒலிபரப்பாகியது..
"துபாய்க்கு அருகிலிலுள்ள மிலிண்டா தீவில்.. பிரபல பயங்கரவாதியான 'அஜ்மல்' மறைந்திருக்கிறான் என்ற செய்தி இன்டர்போலுக்கு கிடைத்தது.. அவர்கள் தீவை சுற்றி வளைத்த போது பயங்கரமான குண்டு வெடிப்பு நிகழ்ந்ததில்.. தீவே பற்றி யெரிந்து போனது.. அதில் அஜ்மல் இறந்து விட்டான் என்று இன்டர் போல் தெரிவித்து இருக்கிறது.."
சின்னத்திரையில் செய்திவாசித்துக் கொண்டிருந்த பெண் உணர்ச்சிகள் துடைத்துவிட்ட முகத்துடன் இயந்திர கதியில் செய்தியை சொல்லிக் கொண்டிருந்தாள்...
மிலிண்டா தீவில் குண்டு வெடித்து தீவே.. தீப்பற்றி எரிந்த காட்சியை தொலைக்காட்சியின் செய்திச் சேனல் மீண்டும்.. மீண்டும் ஒலிபரப்பியது..
பத்மினி மயங்கிச் சரிந்தாள்.. என்னவென்று புரியாமல் அவளது கணவன் திகைத்து விழித்தான்...
காஞ்சனா பித்துப் பிடித்தவளைப் போல திக்பிரமையுடன் உட்கார்ந்து விட்டாள்.. சாரங்கபாணி இடிந்து போனார்...
"அவனுக்கு இவ்வளவு சீக்கிரம் முடிவு வந்திருக்க வேண்டாம் சுமி..."
கௌதமிற்கு மனதை என்னவோ செய்தது.. சுமித்ரா பதில் பேசவில்லை... ரகுவீர் சக்கரவர்த்தி மிலிண்டாவில் அவர் கழித்த நாள்களை நினைவுகூர்ந்தார்.. அப்படிப்பட்ட பயங்கரவாதிக்கு இப்படித்தான் முடிவு வரும் என்று சிபி கூறினான்...
யாருடைய அபிப்ராயத்தையும் கேட்டுக் கொள்ளாமல் காலம் நகர்ந்தது...

No comments:

Post a Comment