மைவிழியே மயக்கமென்ன ?-127

127
உனக்கென்னடி.. ஒரு பார்வையிலே..
உயிர் துடிக்க வைத்து விட்டாய்..
எனக்குத்தானே தெரியும்..?
இரவு முழுக்க.. கண்விழித்திருந்த வேதனை..!

ஒரு நொடியில் சுதாரித்துக் கொண்டான் கௌதம் சீனிவாசன்..
'இவனுக்கு நான் துபாயிலிருப்பது தெரிந்து விட்டது..'
"ரொம்ப ஹாட்டாயிருக்கு கணேஷ்.. நீ இந்தப்பக்கம் வந்துவிடாதே.."
"வராமல் வேற எங்கே போகச் சொல்கிறாய்..?"
"சிம்லாவுக்கு போய் விடு.. உனக்கு அதுதான் சரியான இடம்.."
"நீ ஊட்டிக்குப் போகப் போகிறாயா..?"
"கரெக்டாகச் சொல்லி விட்டாயே.. அதைத்தான் செய்யப் போகிறேன்.. ஆயிரம்தான் சொல்லு.. நம்ம ஊர்  நம்ம தான்.. அசலூர்.. அசலூர்தான்.."
"ஓஹோ.. ஆமாம்.. ஹைதராபாத்துக்கு கம்யூட்டர் கம்பெனி ஆரம்பிக்கிற விசயமாகப் போனாய்..? துபாய்க்கு எதற்கு போனாய்..?"
"ம்ம்ம்.. பெட்ரோல் கிணறு ஒன்னு விலைக்கு வந்தது.. அதை வாங்க வந்தேன்.. போதுமா..?"
"போதாதே.."
"உனக்கு என்னதாண்டா வேணும்..?"
"உண்மை.."
"அதை எந்தக் கடையில் விற்கிறாங்கன்னு சொல்லு.. ஒரு கிலோவை வாங்கி உனக்கு அனுப்பி வைக்கிறேன்.. அப்புறமாவது ஆளை விட்டிருவ இல்ல..?"
"விடமாட்டேன்.."
"விடாமல் என்ன செய்யப் போகிறாய்..?"
"நீ துபாய்க்கு எதுக்குப் போன..?"
"ஓகே.. நீ கேட்ட உண்மையைச் சொல்லி விடுகிறேன்.. ஊட்டியில் ஹோட்டலைக் கட்டியதைப் போல.. துபாயிலும் ஒரு ஹோட்டலைக் கட்டலாமுன்னு  ஒரு எண்ணம்.. அது விசயமாக வந்தேன்.."
"பொய்..."
"நீ நம்பலைன்னா.. அதுக்கு நான் என்ன செய்யமுடியும்..?"
"மிலிண்டா தீவிலே ஹோட்டல் கட்டப் போகிறாயா..? அதுக்கான லொகேசனைப் பார்க்கத்தான்... நைட்டோடு.. நைட்டாக போய்விட்டு திரும்பி வந்தாயா..?" கணேஷ் ஆழமான குரலில் கேட்டான்..
கௌதம் பேச்சிழந்தான்..
எதனால்.. உலக அளவில் இந்திய போலிஸ் பெயர் வாங்கியிருக்கிறது என்று அவனுக்கு அப்போதுதான் விளங்கியது...
"என்னடா.. பேச்சைக் காணோம்.. சிங் வேசம் போட்டால்.. உன்னைப் பார்க்காமல் விட்டு விடுவோமா..?"
"யார் சிங் வேசம் போட்டது..?"
"கௌதம் எங்களுக்கு எல்லாம் தெரியும்.."
"என்ன தெரியும்..? நான்தான் உலகம் முழுவதும் குண்டு வைக்கிறேன்னு தெரியுமா..?"
"கௌதம்.."
"போடா.. போய்.. எவன் குண்டு வைத்தானோ.. அவனைப் பிடி.. அதை விட்டுவிட்டு.. என்னை ரோதனை பண்ணாதே.."
"ஏன் மிலிண்டா தீவிற்குப் போனாய்..?"
"நான் போகலை..."
"நீ போனாய்.."
"என்ன ஆதாரமிருக்கு..? அதை முதலில் காண்பி.."
மறுமுனை மௌனமாக.. பல்லைக் கடித்தான் கௌதம்... அவனுக்குத் தெரியும்.. அஜ்மல் என்ற ஆனந்தன் சாமானியன் அல்ல... கௌதம் தீவுக்குள் காலை வைத்தவுடன் அவன் அதை தெரிந்து கொண்டு விட்டான்.. அவன் விட்டுப் பிடித்தது.. கௌதம் பத்மினிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றினான் என்பதற்காக..
மிலிண்டா தீவில் போலிஸ் கால் வைத்திருக்க முடியாது.. அதே சமயம்.. கௌதம் அந்தத் தீவுக்குத்தான் போய் திரும்பியிருக்கிறான் என்பதை போலிஸ் யூகித்திருக்கிறது...
வெறும் யூகத்தை வைத்து.. கௌதமின் வாயிலிருந்து உண்மையை வரவழைக்க நினைக்கிறது..
'நானா.. அகப்படுவேன்..?'
"என்னடா பேச்சைக் காணோம்..?"
"நீ பேசு கௌதம்.. அதற்காகத்தான் நாங்க காத்திருக்கோம்..."
"எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை..."
போனை அணைத்தவன்.. ரகுவீர் சக்கரவர்த்தியை பரபரப்புடன் பார்த்தான்...
"என்ன கௌதம்..?"
"போலிஸ் ஆனந்தனை ஸ்மெல் பண்ணிட்டாங்க மாமா..."
"பண்ணட்டுமே.. அதனால் நமக்கு என்ன நஷ்டம் வந்து விடப் போகுது..?"
"அவங்களாக அவனைப் பிடித்தால் ஒரு நஷ்டமுமில்லை மாமா.. நான் காட்டிக் கொடுத்து பிடித்தால்.. எனக்கு வாக்குத் தவறினேன்ங்கிற பெயர் நஷ்டம் வந்து விடும்.."
"இப்ப என்ன செய்வது..?"
"உங்களுக்கோ பாஸ் போர்ட் இல்லை.. அந்த கணேஷ் இங்கே வந்து உங்களை என்னுடன் சேர்த்து வைத்து பார்த்து தொலைத்து விட்டால்.. வேறு வினையே வேண்டாம்.. நீங்க பாஸ்போர்ட் இல்லாம.. எப்படி துபாய்க்குள்ள வந்து சேர்ந்திங்க.. இத்தனை நாள் எங்கே இருந்திங்க.. என்னை எப்படிச் சந்திச்சிங்கன்னு கேள்வி மேல கேள்வியா கேட்டு நம்மை குடைஞ்சு எடுத்திடுவான்.."
"இரு சிபிகிட்டப் பேசறேன்.."
"இந்தியாவில் இருப்பாரில்ல..?"
"யாருக்குத் தெரியும்..? அவனுக்கு புதிதாய் யாரும் காதலி கிடைத்திருக்காவிட்டால் இந்தியாவில்  இருக்க சான்ஸ் உண்டு.. எதுக்கும் நீ கடவுளை வேண்டிக்க.."
"எதுக்கு மாமா..?"
"அவனுக்கு புதுக்காதலி கிடைத்திருக்கக் கூடாதுன்னுதான்.."
"ம்ஹீம்.. எதுக்குத்தான் கடவுளை டிஸ்டர்ப் பண்ணனும்கிற வரை முறையே இல்லாம போயிருச்சு.. நேரம்தான்.. அவரை நம்பி சுமித்ரா அவர் பின்னால் போயிருக்காளே..."
"சுமித்ராவை சிபி கண்டு பிடிச்சுட்டானா..?"
"அந்தக் கதையை நான் அப்புறமாய் சொல்கிறேன்.. முதலில் இங்கேயிருந்து தப்பிக்கிற வழியைப் பார்ப்போம்.."
ரகுவீர் சக்கரவர்த்தி கௌதமின் போனை வாங்கி.. சிபிசக்கரவர்த்தியிடம் பேசினார்.. மறுமுனையில் ஆனந்தக்குரல் கேட்டது..
"அப்பா.. நீங்களேதானா..?"
"இல்லைடா மகனே.. என் குளோனிங் பேசுது.."
"நிச்சயமாய் இது நீங்கதான்.."
"எப்படிடா இவ்வளவு நிச்சயமாய் சொல்கிற..?"
"எவ்வளவு இக்கட்டான நிலைமையிலும் இப்படி இடக்காகப் பேச உங்களால்தானே முடியும்..?"
"இதையே சொல்லி.. என்னை ஒருவருசமாய் நடுக்கடலில் உட்கார வைத்து விட்டாயேடா மகனே.."
"எப்படிப்பா தப்பிச்சீங்க..?"
"அந்த ஆனந்தன் கூட டிஷ்யூம்.. டிஷ்யூம்ன்னு சண்டைபோட்டு ஜெயிச்சுத்தான் தப்பிச்சேன்.."
"விளையாடாதீங்கப்பா..."
"இந்த வயசில் விளையாட எனக்கும் ஆசைதான்.. உடம்பில் தெம்பு வேணுமே சிபி.."
"இப்ப எங்கே இருக்கீங்க..?"
"துபாயில்"
"உடனே கிளம்பி வர வேண்டியது தானேப்பா..?"
"அப்பா.. ஒருவழியாய் அதைத் தெரிந்துக்கிட்டாயே.. அந்த மட்டிலும் நான் பிழைத்தேன்.. சிபி.. நான் பிளைட்டில் வர முடியாதுடா.."
"ஏன்ப்பா.. கையில் பணமில்லையா..? எங்கேயிருக்கீங்கன்னு சொல்லுங்க.. ஐந்தே நிமிசத்தில் உங்க கைக்கு பணம் வரும்.."
"பாஸ்போர்ட் வருமா..?"
"அப்பா..?"
"அதுதாண்டா பிரச்னை.. இங்கே என்னை ஒருத்தன் சிறை மீட்டு வைத்திருக்கான்.. அவன் மட்டும் தனியாய் கிளம்பனும்ன்னா.. எப்பவோ இந்தியாவுக்கு கிளம்பிப் போயிருப்பான்.. கூட நான் ஒரு லக்கேஜா இருக்கேனில்லையா.. பாஸ்போர்ட் இல்லாம எப்படி இந்தியாவுக்கு என்னைக் கூப்பிட்டுக்கிட்டு வர்றதுன்னு கதி கலங்கிப் போய் உட்கார்ந்திருக்கிறான்.."
"கவலைப் படாதீங்க.. நான் கிளம்பி வருகிறேன்.."
"நீ கிளம்பி வந்து.. அதுக்கப்புறம்.. நாங்க கிளம்பி வருகிறதா..? விடிந்துடும் போ.."
"அப்பா.. நான் ஸ்பெசல் பிளைட்டை புக் பண்ணி பறந்து வருகிறேன்ப்பா..."
சொன்னபடி.. அடுத்த சில மணி நேரங்களில் சிபி சக்கரவர்த்தி தனி விமானத்தில் துபாய்க்கு பறந்து வந்து விட்டான்..
அதுவரை கணேஷின் கண்களில் பட்டு விடக் கூடாதே என்ற தவிப்போடு கௌதமும்.. ரகுவீர் சக்கரவர்த்தியும் காத்திருந்தார்கள்..
தகப்பனாரை எந்த வித சேதமுமில்லாமல் பார்த்து விட்டதில் சிபி கண்கலங்கிவிட்டான்...
"இந்தியாவுக்குள்ள கால் வைத்தவுடனே எனக்கு ஷாக் நியுஸ் காத்திருந்ததுப்பா.. உங்களையும் காணோம்.. சுமித்ராவையும் காணோம்.. அவளை ஒப்படைச்சாத்தான் உங்களைத் திரும்பி ஒப்படைப்பேன்னு அந்த ஆனந்தன் சொல்லிட்டான்.. போலிஸீக்கு போக முடியலை... நான் சுமித்ராவைத் தேடிக் கிளம்பினேன்.."
"எதுக்குடா..? அவளைக் கண்டு பிடித்து ஆனந்தன்கிட்ட ஒப்படைத்துவிட்டு என்னை சிறை மீட்கிறதுக்கா..?"
"அப்படி நான் செய்தால் என்னைச் சுட்டுக் கென்று விட மாட்டிங்களாப்பா..?"
"இப்பத்தாண்டா நீ என் மகன்.."
"எப்பவுமே நான் உங்க மகன்தான்.. சுமித்ரா அரண்மனையை விட்டு வெளியேறி ஒரு வருடமாகி விட்டிருந்தது.. நீங்கள் ஆனந்தனின் காவலில் இருக்கிறிங்கன்னு தெரிந்து விட்டது.. சுமித்ரா எங்கேன்னு தெரியலையே.. ஆனந்தன் ஒருபக்கம் அவளைத் தேடிக்கிட்டு இருப்பானே.. அவன் கையில் அகப்படாமல் அவள் தப்பிப் பிழைத்திருக்கனுமேன்னு கவலைப்பட்டேன்.. அவளைக் கண்டுபிடித்து.. அவளை என் பாதுகாப்பில் வைத்துக்கத்தான் தேட ஆரம்பித்தேன்ப்பா.."
"அவளை கண்டு பிடித்து விட்டாயா..?"
"ம்ம்ம்.. ஊட்டியில் ஒரு ஹோட்டலில் ஜி.எம்மா வேலை பார்த்துக்கிட்டு இருந்தா.. அவ தலைவிதியைப் பார்த்தீங்களாப்பா.. ராணி சுமித்ரா தேவி.. வேலை பார்த்து பிழைத்திருக்கிறாள்.."
"முதலில் அவ பிழைத்திருந்தாளே.. அதுக்கு கடவுளுக்கு நன்றி சொல்வோம்.."
"இவர் எப்படி இங்கே வந்தார்..?"
அதுவரை தகப்பனாருடன் பேசிக் கொண்டிருந்த சிபி.. கௌதமை கை காட்டிக் கேட்க.. ரகுவீர் சக்கரவர்த்தி...
"ம்ஹீம்.. இதுவும் நேரம்தான்.." என்றார்..
"ஏன்ப்பா..?"
"இவர்தான் என்னை சிறை மீட்டாருப்பா.."
"அப்படியா.. ஆச்சரியமாயிருக்கே.."
"இன்னும் நிறைய ஆச்சரியங்களை நீ பட வேண்டியிருக்கு.. அதனால் அவசரப்பட்டு இப்பவே மொத்தமாய் ஆச்சரியப் பட்டுவிடாமல் ஸ்டாக் கைத்துக்க.. பின்னால் நிறைய தேவைப்படும்.."
அவர்களின் விமானம் டெல்லியில் தரை இறங்கியது...
"என்னடா சிபி.. டெல்லி வந்திருக்கோம்..?"
"ஏன்ப்பா..?"
"நாம் கிரண்பூருக்கோ இல்லை.. ஹைதராபாத்துக்கோ போகப் போகிறோமுன்னு
நான் நினைத்திருந்தேன்..."
"இந்த இரண்டு ஊர்களிலும் நான்.. சுமித்ராவோடு இருக்க முடியாதே அப்பா.. ஆனந்தன் கண்டு பிடித்து விடுவானே.."
"ஓ.. அது ஒன்னு இருக்கில்ல..."
"அதுதான் முக்கியமாய் இருக்கு.."
அவர்கள் காரில் ஏறிப் பறந்தார்கள்.. டெல்லியின் பணக்காரப் பகுதிக்குள் நுழைந்த கார்.. ஒரு பெரிய வீட்டின் போர்டிகோவில் போய் நின்றது...
"இது யார் வீடு சிபி..?"
"நம் வீடுதான்..."
"டெல்லியிலே எனக்கொரு மருமகள் காத்திருப்பான்னு நீ சொல்லவே இல்லையே.."
ரகுவீர் சக்கரவர்த்தி ஆர்வத்துடன் கேட்டு வைக்க.. தாள முடியாத சிபி.. மௌனப் பார்வையொன்றை இமைக்காமல் பார்த்து வைத்தபின் தான் அவர் வாயை மூடினார்..
"இந்த வீட்டை விலைக்கு வாங்கியிருக்கேன்ப்பா.. சொந்தக்காரங்க.. பிரண்ட்ஸீன்னு யார் வீட்டில் போய் தங்கினாலும்.. அந்த ஆனந்தன் கண்டு பிடிச்சுத் தொலைச்சிருவானே.."
"அதைச் சொல்லு..."
"இப்ப இதை நீங்க சொல்லுங்க.. நம்ம வீடுன்னு நான் சொன்னா.. அது என் காதலியின் வீடாத்தான் இருக்கும்ன்னு உடனே முடிவு கட்டி விடறதா..?"
"பழக்க தோசம்டா.."
"மாத்திக்கங்கப்பா... உங்களை பணயக் கைதியாய் விட்டு வைத்து விட்டு சுமித்ராவை பாதுகாக்க திண்டாடிக்கிட்டு இருக்கிற இந்த நிலைமையில் காதல் பண்ண என்னால் முடியுமா..?"
"ஓ.. அதனால்தான் நீ இன்னும் உன் காதலியைத் தேடி.. பாரின் பக்கம் போகாமல் இருக்கிறாயா..?"
'பேசாமல் இந்த மனிதரை சிறை மீட்காமலே இருந்திருக்கலாம்..'
ஒரே சமயத்தில் இந்த நினைவு சிபிசக்கரவர்த்தி.. கௌதம் சீனிவாசன் இருவர் மனதிலும் எழுந்து நின்றது..

No comments:

Post a Comment