பொதிகையிலே பூத்தவளே -12

12
‘ நீ எப்புடிப் பாத்தாலும் என் மனசு படியாது .’ அவள் விறைப்பாக அவன் பார்வையை எதிர்கொண்டாள் ..
ஒரு நொடிக்குமேல் அவன் பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை ..தீட்சண்யம் மிக்க அவனது பார்வை அவளை ஆக்டோபஸ் போல வளைத்து இழுத்து உள்ளே தள்ள முயன்றது ..நடுக்கத்துடன் பார்வையை விலக்கிக் கொண்டாள் ..
‘ என்ன இது ..?’ மனது நடுங்கியது ..
அவன் யார் ..எப்படிப்பட்டவன் ..என்றெல்லாம் அவளுக்கு நன்றாகவே தெரியும் ..அவனைப் பார்த்த முதல் சந்திப்பின்போதே கூட ஒரு மேகியை தொற்ற விட்டிருந்தவன் அவன் ..
‘ வெறும் மேகியில்லை ..மேனாமினுக்கி .’
அப்படிப்பட்டவனின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அவள் தவித்துப் போவதா ? அவளுடைய நேர்கொண்ட பார்வையை பார்க்க முடியாமல் அவனல்லவா தவித்துப் போக வேண்டும் ..
அவளது தவிப்பில் அவன் கண்களில் வெற்றிக் களிப்பு வந்தது ..உதடுகளில் இளநகை படர்ந்ததில் தோல்வியைத் தாங்க முடியாமல் அவளது கண்களில் கண்ணீர் அரும்பி விட்டது ..அதைக் கண்டவனின் சிவந்த முகம் கருத்தது ..
“ என்னை வில்லனாவே பார்க்க வேண்டாம் மீனா ,”
“ நீங்க எனக்கு ஹீரோவும் இல்லை சார் ..”
“ இசிட் ..?”  நம்பாமல் கேட்டுவிட்டு நகைத்தான் ..
வெகுண்டு நிமிர்ந்தாள் மீனா ..கண்களில் கண்ணீருடன் அவள் சீற்றம் கொண்டு முறைத்ததை அவன் ரசித்தான் ..அவளுடைய நேர்மைமிகு கோபமும் , நிமிர்வான பார்வையும்தானே அவனை ஈர்க்கிறது ...செக்கசிவந்த அவளது அழகிய முகம்  வெகுவாக அவனைக் கவர்ந்தது ..
“ வேறு யார் நானுனக்கு ..?”
இந்தக் கேள்வியில் இருந்த எதிர்பார்ப்பும் தன்னம்பிக்கையும் அவளை சுட்டுப் பொசுக்கின ..அவனது பார்வையை எதிர்கொள்ள முடியாத இயலாமையினால் அல்லவா அவன் இதுபோலக் கேட்கிறான் ..
“ நீங்கள் எனக்கு யாருமேயில்லை சார் ..நான் இங்கே வேலை செய்கிறேன் ...நீங்க சம்பளம் கொடுக்கறீங்க ..நாளைக்கே இந்த வேலை எனக்குப் பிடிக்காம போச்சுன்னா யோசிக்காம வேலையை விட்டுட்டுப் போய்கிட்டே இருப்பேன் ..அப்போ இந்த சம்பந்தம் கூட இருக்காது ..”
விஸ்வாவின் முகம் மாறியது ..கோபத்துடன் அவளை உறுத்துப் பார்த்தான் ..இந்தப் பார்வையை எதிர்கொள்வது அவளுக்கு சுலபமாக இருந்தது ..
‘ இப்புடியே பாருடா  ,’ மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்
‘ உன் ரொமான்ஸ் பார்வையை எல்லாம் வேறு எங்காவது வைத்துக் கொள் ..நீ சரியா நடந்துக்களைன்னா எந்த நிமிசமும் நான் இந்த வேலையைத் தூக்கி எறிஞ்சுட்டுப் போய்கிட்டே இருப்பேன் ..அந்த நினைப்பு ஒன் மனசில இருக்கட்டும் ..வேற எந்த நினப்போடையும் நீ என்னப் பாக்கக் கூடாது ..நான் மீனாடா ..மேகியில்ல ,’
பேச்சு போகும் திசையை விரும்பாமல் விஸ்வா முகம் சுளித்தான் ..அவனது முகத்திற்கு அதுவும் கூட அழகாக இருப்பதாக மீனாவின் மனம் ஜொள்ள யத்தனித்ததில் அவள் பயந்து போனாள் ..
இப்போது அவன் ஒன்றும் இணக்கமாக பேசவில்லையே .. முகத்தைத்தானே சுளிக்கிறான் ? அதில் மயங்க முனைவது மீனாவின் மனமல்லவா ?
‘ இம்சைபிடிச்சவன் ..! நிம்மதியா வேலயப் பாத்தோமா ..வீட்டுக்குப் போனோமான்னு இருக்க விட மாட்டேங்கிறான் ..எப்பப் பார்த்தாலும் கூப்பிட்டு முன்னாடி நிக்க வச்சு உத்து உத்துப் பாக்கறான் ..பேச்சுக் கொடுக்கறான் ..ஆளு வேற ஜம்முன்னு இருந்து தொலைச்சா பாழும் மனசு தடுமாறித் தொலைக்காதா ? .’
அதற்கும் அவனையே காரணமாக்கி திட்டித் தீர்த்தது அவள் மனம் ..விரோதியை முறைப்பதைப் போல அவனை முறைத்தவள்
எங்கோ பார்த்தபடி
“ எதுக்காக என்னை வரச் சொன்னீங்கன்னு சொன்னாத் தேவலாம் ,” என்றாள் ..
“ சொல்லலைன்னா ?.”  அவளையே பார்த்தபடி கேட்டான் அவன் ..
“ போய்கிட்டே இருப்பேன் ..”
“ எங்கே ..?.”
“ என் வேலையைப் பார்க்க ..”
“ இதுவும் உன் வேலைதான் ..”
‘ எதுடா ? பொண்ணுப் பாக்க வந்த மாப்பிள்ள முன்னால நிக்கிறதப் போல உன் முன்னால நிக்கிறதா ?.’
அப்போதுதான் அவன் அவளை ‘ நீ , வா , போ ,’ என்று ஒருமையில் அழைப்பது அவளுக்கு உரைத்தது ..இவன் எப்படி அவளை வா , போ என்று சொல்லலாம் ? கோபம் வந்தாலும் அதை ஒரு பிரச்சனையாக்க அவளுக்கு மனம் வரவில்லை ..அவனை கேள்வி கேட்க முடியவில்லை ..அதைவிட பெரிதாக ஆயிரம் பிரச்னைகள் இருக்கும்போது இதை ஒரு பிரச்னையாக்குவதா என்று  மனது நொண்டிச் சமாதானம் சொன்னது ..
‘ கிடக்கிறது எல்லாம் கிடக்கட்டும் ..கிழவியத் தூக்கி மனையில வைய்யிங்கற கதையா ..இம்பூட்டு விசயத்த ஊதிப் பெரிசாக்கனுமாக்கும் ?,’
அடிப்பாவி ..இது இம்பூட்டு விசயமா ? என்று அவள் மனது அலறத்தான் செய்தது ..
‘ இல்லையா ?.’ என்று பதிலுக்குக் கேட்டு அவள் மனதின் குரலுக்கு திண்டுக்கல் பூட்டு ஒன்றை மாட்டி வைத்தாள் ..
‘ இவனே வானத்துக்கும் பூமிக்குமா வளந்தானா நிக்கிறான் ..ஏழு கழுதை வயசிருக்கும் ..காலாகாலத்தில கல்யாணம் கட்டியிருந்தா ரெண்டு புள்ளைக்கு அப்பனா ஆகியிருப்பான் ..இத்தனுண்டு பொம்பளப் புள்ள நானு ..என்னைய வா போன்னு கூப்பிட்டா என்ன ஆகிறப் போகுது ? இப்ப ஆறுமுகம் சார் என்னை வாங்க , போங்கண்ணா கூப்பிடறார் ?.’
இப்படியெல்லாம் அவள் நீதிடா , நேர்மைடா , நாயம்டா என்று யோசிப்பாள் என்று அவளுக்கே அன்றுதான் தெரிய வந்தது ..
அதற்கு மேலும் அங்கு நின்றால் என்னென்ன தோன்றி வைக்குமோ என்று பயந்து போனாள் மீனா ..அவன் பக்கத்தில் நின்றால் நியாயங்கள் மாறித் தொலைக்கிறதே ...
“ எதுக்காக என்னை வரச் சொன்னீங்கன்னு சொல்லுங்க சார் ,”
“ காமினி இன்றைக்கே வண்டியூர் தெப்பக்குளத்தைப் பார்க்கனும்னு ஆசைப்படறா ..”
“ இன்றைக்கேவா ..?”
“ எஸ் ..இருட்டுவதற்குள் உன் வீட்டில் டிராப் பண்ணிடறோம் ..”
மனதில்லாமல் தலையை அசைத்தாள் மீனா ..அவளது மதுரையை ஆர்வத்துடன் ரசித்துச் சுற்றிப் பார்க்கும் காமினிக்காக பொறுத்துப் போக வேண்டியிருக்கிறது ..வீட்டுக்கு ஆட்டோ பிடித்துப் போய்விடுவேன் என்று பிலிம் காட்டினால் அபத்தமாக இருக்கும் ..
“ எங்களுடன் நீயும்தானே ஊரைச் சுற்றினாய் ?”
“ ஒரு திருத்தம் சார் ..ஊரைச் சுத்தலை ..ஊரைச் சுற்றிக் காட்டினேன் ,” மீனா நினைவுருத்தினாள் ..
“ ஓகே ..நான்தான் தப்பாச் சொல்லிட்டேன் ..நாங்க ஒன் அவர் ரெஸ்ட் எடுத்துட்டு கிளம்பறதா இருக்கோம் ..நீயும் ரெஸ்ட் எடுக்கலாமே ?”
“ இது நான் வேலை செய்கிற இடம் சார் ..இங்கே தூங்கி வழிஞ்சா விளங்கிரும் ..”
“ அதனால் என்ன ?”
“ உங்களுக்கென்ன சார் ..நான் உறங்கி வழியாம ஊரைச் சுற்றிக் காட்டனும் ..அவ்வளவுதானே ..அத்தோடு நிருத்திக்கங்க ..எப்ப நீங்க கிளம்பறீங்களோ அப்ப நானும் கிளம்பி ரெடியா இருப்பேன் ..”
ஆளை விடுடா சாமி என்று ஓடி விட்டாள் மீனா ..அவனுடைய அனுமதிக்குக் காத்திருக்கவில்லை ..அங்கே நின்றிருந்தால்தானே எதையாவது பேசிக் கொண்டிருப்பான் ? ஓடி விட்டால் ? என்ன செய்வான் ? கம்யுட்டரின் முன் அமர்ந்தவுடன் கொட்டாவி வந்தது ..அலுவலக அறையிலேயே உட்கார்ந்திருந்தால் ஒன்றும் தெரிந்திருக்காது ..ஊர் சுற்றிய அலைச்சல் ..மதிய உணவு வயிற்றில் விழுந்த மயக்கம் ..கண்ணைச் சுழற்றியது ..
‘ டீ குடித்தா தேவலை ,’
அவள் நினைத்து முடிக்கும் முன் அவள் முன்னால் டீ கப் இருந்தது ..இது என்ன ஜீபூம்பா வேலையா என்று அவள் பயந்து போனாள்
“ முதலாளி போன் பண்ணி உனக்கு டீ வாங்கிக் கொடுக்கச் சொன்னாரும்மா ..அதான் டீ கொண்டு வரச் சொன்னேன் ,”ஆறுமுகம் சொன்னார் ..
அவனது அக்கறையில் எரிச்சல் வந்தாலும் சூடான டீ தூக்கத்தை விரட்டித் தெம்பூட்டியது ..
மீனா அன்றைய மெயில்களைக் கவனித்து பதில் அனுப்பினாள் ..வேலை முடிந்ததும் எழுந்து ஓய்வறைக்குச் சென்று முகம் கழுவி மெலிதாக ஒப்பனை செய்து கொண்டாள் ..இருக்கைக்கு வந்தவள் அலுவலகத்தைக் கூட்டிப் பெருக்கும் ஆயாவை அழைத்து தன் மதிய உணவு டப்பாவைக் கொடுத்துச் சாப்பிடச் சொன்னாள் ..சந்தோசமாக அதை வாங்கிய ஆயா சாப்பிட்டு முடித்து கழுவிக் கொண்டு வந்த டிபன் டப்பாவை வாங்கி ஹேண்ட்பேக்கில் வைத்துக் கொண்டாள் ..சற்று நேரத்தில்
“ மீனா ..ரெடியா ?” என்ற அழைப்புடன் காமினி வந்து விட்டாள் ..
மீனா அவர்களுடன் காரில் ஏறிக்கொண்டாள்
வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தைப் பார்த்ததும் காமினி
“ வாவ் ..!” என்றாள் ..
அவள் மீனாட்சியம்மன் கோவிலின் அழகிலும் விஸ்தீரணத்திலும் மயங்கி இதைப் போல்தான் சொன்னாள் என்பதில் மீனாவின் மனதில் பிரியம் வந்தது ..அவளது மதுரையின் அழகில் காமினி மயங்குவதில் அவள்மீது ஆழ்ந்த அன்பு உண்டானது .
“ கிரேட் ..”ஆர்வத்துடன் சுற்றிலும் பார்த்தாள் காமினி
“ இந்த தெப்பக்குளம் முன்னுற்றி ஐந்து மீட்டர் நீள அகலம் கொண்டது மேம் ..” பெருமையுடன் விவரித்தாள் மீனா
தெப்பக்குளத்தின் நான்கு பக்கமும் பனிரெண்டு நீளமான படிக்கட்டுகளும் சுமார் பதினைந்து அடி உயரத்துக்கு கல்லினால் சுவரும் கட்டப் பட்டிருந்தன ..குளத்தின் நடுவிலிருந்த நீராழி மண்டபம் காமினியைக் கவர்ந்து மற்றுமொரு
“ வாவ் .” வை சொல்ல வைத்தது .
நீராழி மண்டபத்தில் தோட்டத்துடன் கூடிய விநாயகர் கோவில் காமினியை பரவசப் பட வைத்தது ..அவளது நவநாகரிக தோற்றம் ஒரு வேசம் என்று நினைத்துக் கொண்டாள் மீனா ..அவளது நடிப்புத் தொழிலுக்காக போட்டிருக்கும் வேசம் ..உள்மனதில் உள்ள காமினி வேறானாவள் ..ஆன்மீகத் தேடல் கொண்டவள் ..
“ குளத்தில தண்ணி எப்பவும் இருக்குமா ?”
தானும் ஆர்வமாக இருப்பதைப் போலக் காட்டிக் கொண்டு தருண் கேட்டான் ..
‘ உன் ஆர்வம் எதில இருக்குன்னு எனக்குத் தெரியாதா ?’ மீனா எரிச்சல் கொண்டாலும் அவன் ஒப்புக்குக் கேட்பது அவளது மதுரையைப் பற்றிய விவரம் என்பதினால் பல்லக் கடித்துக் கொண்டு பதில் சொன்னாள் ..
“ சுரங்கக் குழாய்கள் வழி வைகை நதியின் தண்ணீர் தெப்பக் குளத்துக்கு வருகிறதைப் போல இணைப்புக் கொடுத்திருங்காங்க ,”
“ மார்வலஸ் ,” மீனாவைப் பார்த்தபடி தருண் ஜோள்ளியது குளத்திற்கான வியப்பு என்று அப்போதுதான் பிறந்த பச்சைக் குழந்தை கூடச் சொல்லாதுNo comments:

Post a Comment