மைவிழியே மயக்கமென்ன ? - 35

35
உன்னை  விட்டுப்  போக
என்னால்  எப்படி  முடியும்..?
உன்  விழியால்  என்னைக்
கட்டிப் போட்டு.. காவலில் வைத்து விட்டாயே..

காலை உணவுக்காக டைனிங் டேபிளுக்கு வந்த சுமித்ராவை.. எரிச்சலுடன் பார்த்தாள் லலிதா..
'இவ ஏன்.. இவ்வளவு அழகாக இருந்து தொலைக்கிறா..'
அன்று தான் பூத்த புதிய மலரைப் போல.. அழகின் வடிவமாக இருந்த சுமித்ராவின் மீது அவளுக்கு காழ்ப்புணர்ச்சி பொங்கியது..
'நேற்றைக்கு அம்மாவும்.. அத்தையும் கொடுத்த கொடுப்பில் ஓடி ஒளிஞ்சு விடுவான்னு பார்த்தா.. இவ.. எதுவுமே நடக்காததைப் போல இவ்வளவு பிரெஷ்ஷா வந்து நிற்கிறாளே..'
"குட்மார்னிங் ஆண்ட்டி.."
முக மலர்ச்சியுடன் கூறிய சுமித்ராவின் காலை வணக்கத்தை விசாலினியால் அலட்சியப் படுத்த முடியவில்லை..
"குட் மார்னிங்..."
அவள் வேறு வழியின்றி பதிலுக்குச் சொல்லிவைக்க.. தான்யலட்சுமி அவளை முறைத்தாள்..
"குட்மார்னிங் அங்கிள்.."
மகாதேவன் போனால் போகிறதென்று தலையசைத்து வைத்தார்..
'அடுத்த குட்மார்னிங் தாத்தாவுக்கா..?'
லலிதா பல்லைக் கடிக்கும் போது.. சுமித்ராவை முந்திக் கொண்டு விட்டார் சீனிவாசன்..
"குட்மார்னிங் சுமித்ரா.. நன்றாகத் தூங்கினயா..?"
'இங்கே.. சொந்தப் பேத்தி.. கல்லுக்குண்டைப் போல உட்காந்திருக்கிறேன்.. என்னைக் கண்டுக்காம.. இந்தத் தாத்தா.. அவளை நலம் விசாரிக்கிறாரே...'
அவள் நினைத்து முடிப்பதற்குள்.. துளசி.. சுமித்ராவைப் பரிவுடன் பார்த்தபடி..
"எங்கே தூங்கியிருக்கப் போகிறா.. கண்ணெல்லாம் சிவந்திருக்கு.. முகமே சோர்ந்திருக்கு.. அதிலிருந்தே தெரியலையா..? குழந்தை சரியாத் தூங்காம மனசைப் போட்டு அலட்டியிருக்கான்னு.." என்று சொல்லி வைத்தாள்..
அதற்கு மேல் லலிதாவினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை..
'குழந்தையாம்.. குழந்தை.. இவளா குழந்தை..?' என்று பொறுமியவள்.. அந்தப் பொறுமலை வெளிப்படையாகக் கொட்டினாள்..
"ஏன் பாட்டி.. உங்களுக்கே இது நியாயமாய் இருக்கா..?"
அவளின் படபடப்பைக் கண்டு அலட்டிக் கொள்ளாமல் நிதானமாக புருவங்களை உயர்த்தினாள் துளசி..
"எது நியாயமாய் இல்லை..?"
"இவளைப் பார்த்து குழந்தைன்னு சொல்கிறீங்களே.. இவளா குழந்தை..?"
"அது ஒரு பாசத்தில் சொல்கிற வார்த்தை.. அதைப் போய் ஒரு பேச்சாய் பேசுகிறயே.. உன்னைக் கூடத் தங்கமுன்னு கொஞ்சுறேன்.. அதுக்காக.. நீ தங்கமாகிருவியா..?"
இந்தக் கேள்விக்கு லலிதா என்ன பதிலைச் சொல்லுவாள்..?
"நானும் இவளும் ஒன்றா பாட்டி..?"
"அது எப்படி ஒன்றாவீங்க.. நீ லலிதா.. இவள் சுமித்ரா.."
"விளையாடாதீங்க பாட்டி.."
"உன் கூட விளையாடும் வயதா எனக்கு..? தட்டைப் பார்த்து சாப்பிடுகிற வேலையைக் கவனி.."
துளசி கண்டிப்புடன் கூறிக் கொண்டிருந்த போது கௌதம் வாய் விட்டுச் சிரித்தான்...
"எதுக்கு அத்தான் சிரிக்கறீங்க.." லலிதா சிணுங்கினாள்..
"அந்த வேலையையாவது ஒழுங்காக கவனின்னு பாட்டி சொல்லாமல் சொல்கிறாங்க லலிதா.. உனக்கு அது புரியலையா..?"
"உங்களுக்கு இதெல்லாம் புரிஞ்சிரும்.."
"வேறு எது புரியாது.."
"என் மனசு..."
சந்தடி சாக்கில் கிடைத்த வாய்ப்பை பயன் படுத்திக் கொண்டு லலிதா தன் மனதை வெளிப்படுத்த.. அதை கண்டு கொள்ளாமல் அவள் தலையில் செல்லமாகக் குட்டி விட்டு கௌதம் எழுந்து கொண்டான்..
"உன் மனசில் என்ன இருக்குன்னு எனக்குத் தெரியாதா..?"
"தெரிஞ்சுக்கிட்டிங்களா அத்தான்.."
லலிதா ஆவலுடன் வினவ.. அவன் அதற்கு தலையை மேலும் கீழும் ஆட்டினான்..
"அதெப்படி தெரியாமல் போகும்..?"
"அப்படின்னா.. அது என்னன்னு சொல்லுங்க.."
"வேறென்ன.. இன்னைக்கு ரிலிஸாகியிருக்கிற புதுப்படத்தை உனக்குப் பார்த்தாகனும்.. அதுதானே.. என் பிரண்ட் சினிமாத் தியேட்டரை கட்டினாலும் கட்டினான்.. உனக்கு.. இங்கே வந்தவுடன் படம் பார்க்கிற ஆசை வந்துவிடுகிறது.. கவலையே படாதே.. ஈவினிங் ஷோவுக்கு அவனுக்கு போன் போட்டுச் சொல்லி விடுகிறேன்.. நாம போகலாம்.."
கடைசியில் சினிமாவுக்கு அவள் ஆசைப் படுவதாக நினைத்து விட்டானே என்று மனம் கூம்பினாலும்.. அவளை சினிமாவுக்கு அழைத்துக் கொண்டு போவதாய் சொல்லுகிறானே.. என்று லலிதாவுக்கு உற்சாகம் ஏற்பட்டது..
"நாமன்னா.. நீங்களும்.. நானும்தானே அத்தான்..?"
"ஊஹீம்.. நீ.. நான்.. சுமித்ரா..."
அவனுடைய பதிலில் அவளுடைய உற்சாகம் வடிந்து விட்டது...
"இவளுமா..?"
"ஆமாம்.."
"இவள் எதற்கு அத்தான்..?"
"சினிமா பார்க்கத்தான்.."
கௌதம் இலகுவாக கூறியபடி சுமித்ராவைப் பார்த்தான்.. அவனது பார்வையில் அவள் எழுந்தாள்.. இருவரும் தாழ்ந்த குரலில் பேசியபடியே கை கழுவிக் கொள்வதை பொறாமையுடன் பார்த்தாள் லலிதா..
"நான் சினிமாவுக்கு வரலை.."
காரில் போகும் போது சுமித்ரா கூறினாள்..
"ஏன் வரலை..?"
"நீங்க லலிதாவுடன் சினிமாவுக்கு போய்விட்டு வாங்க..."
"இதைப் பாருடா.. உனக்கு அவ்வளவு பெரிய மனதா..?"
"புரியலை.."
"என்னை வேற ஒருத்திக்கு விட்டுக் கொடுக்கறியே.. அவ்வளவு பெரிய மனதான்னு கேட்டேன்.."
"கௌதம்.."
சுமித்ரா கோபத்துடன் அவனது கையில் கிள்ள.. அவன் பொய்யாக..
"ஆ.. வலிக்குதுடி.." என்று அலறினான்..
"ஆம்பளைப் புத்தியை காட்டறிங்கள்ல..?"
"நீ பொம்பளைப் புத்தியை காட்ட மாட்டேங்கறியே..."
"அது என்னவாம்..?"
"ஆம்பளைப் புத்தி மட்டும் என்னவாம்.."
"அலைகிற புத்தி.."
"பொம்பளைப் புத்தி.. தன்னுடையதை இறுக்கிப் பிடிச்சுக்கிற புத்தி.. யாருக்கும் விட்டுக் கொடுக்காத புத்தி.. என் புத்தி அலைகிற புத்தியாக இருந்தா.. உன் புத்தி இறுக்கிப் பிடிக்கனுமே.. ஏன் விட்டுக் கொடுக்குது..?"
"நானொன்னும் விட்டுக் கொடுக்கலை.. வீணாய் நினைப்பு வச்சுக்க வேண்டாம்.."
"ஏய்ய்.. நான் பாட்டுக்கு உத்தம காதலானாய் அவகிட்ட நாம மூணு பேரும் சினிமாவுக்கு போகிறோமுன்னு சொல்கிறேன்.. நீ என்னவோ நான் நினைப்பை வச்சுக்கிட்டு இருக்கேன்னு சொல்கிற.. அப்படியே நினைப்பை வச்கிருந்தாலும்.. இனிமேல்.. வேற யாரு நினைப்பையும் வைச்சுக்கிட்டு இருக்க மாட்டேன்.."
"பேச்சில் ஒன்னும் குறைச்சலில்ல.."
"வேற எதில குறைச்சல்ன்னு சொல்லு.. சரி பண்ணிரலாம்.."
"உங்க நினைப்பைப் பத்தித் தெரியாதா..?"
"அது என்ன நினைப்புன்னு நீ நினைக்கிற.. என் நினைப்பைப் பத்தின உன் நினைப்பைச் சொல்லு.. கேட்டுக்கிறேன்.."
"நீங்க நடுவில் உட்கார.. நானும் அவளும்.. உங்களுக்கு இரண்டு பக்கமும் உட்காரனும்.. இதுதானே உங்கள் நினைப்பு..?"
"அதாவது.. வள்ளி.. தெய்வானையுடன் முருகன் உட்கார்ந்திருப்பதைப் போலன்னு சொல்கிற..?"
இப்போது சுமித்ரா அனலாய் ஒரு பார்வை பார்க்க.. கௌதம் வாய் விட்டுச் சிரித்தான்..
மலைப் பாதைக்கே உரிய சில்லென்ற பூங்காற்று அவர்களின் முகங்களின் மீது.. முட்டி மோதித் தழுவியது.. எதிர்காற்றில் அவன் முடி அலைபாய.. அதைக் கண்ட சுமித்ராவின் மனமும் அலை பாய்ந்தது...
அவனது கம்பீரமான தோற்றத்திலே அவள் மனம் சிக்கித்தவித்தது.. காரை ஓட்டியபடி அவளை லேசாகத் திரும்பிப் பார்த்த கௌதம் அவளது பார்வையை கண்டு கொண்டான்..
'பார்த்துட்டானே..'
அவசரமாக அவள் பார்வையைத் திருப்பிக் கொண்டதைக் கண்டதும் அவன் கண்களில் மின்னல் வந்தது.. அதைக் கடைக் கண்ணால் பார்த்த சுமித்ராவின் முகத்தில் நாணச் சிகப்பு வந்தது..
செய்வதறியாதவளாக.. அவள் பின்னலை முன்னால் விட்டு.. அதைச் சீண்ட ஆரம்பித்தாள்.. கௌதமிற்கு.. அவளை முதன் முதலில் சந்தித்த நாளன்று கேட்ட பாடல் நினைவுக்கு வந்தது.. அதை ஒலிக்க விட்டான்..
"பின்னலை முன்னேவிட்டு
           பின்னிப் பின்னிக் காட்டுறா...
     பின்னாலே தூக்கிவிட்டு
           கையாலே இழுக்கிறா...
     பூப்போல காலெடுத்து
           பூமியை அளக்கிறா...
     பொட்டுன்னு துள்ளித்துள்ளி
           சிட்டாகப் பறக்கிறா..."
சுமித்ரா.. சட்டென்று பின்னலை விட்டுவிட்டு.. கௌதமை முறைத்துப் பார்த்தாள்.. அவள் முகத்தில் செல்லக் கோபம் பரவியது.. கார் கதவில்.. கையை வைத்து.. அவள் வேகமூச்சு விட.. பாடல் தெடர்ந்து..
"நிலையிலே கையை வைச்சு...
           நிக்கிறா.. நிமிருறா...
     நிறுத்தி மூச்சுவிட்டு...
           நெஞ்சில் தாலாட்டுறா.."
கௌதம் இப்போது வாய் விட்டுச் சிரிக்க... சுமித்ரா உதட்டைக் கடித்துக் கொண்டு.. பாடலை நிறுத்தினாள்...
"ஏய்ய்.. எதுக்குப் பாட்டை நிறுத்தின..?"
"எல்லாத்துக்கும் ஒரு பாட்டை ரெடியா வைத்திருப்பீங்களா..?"
"இது என்வேலையில்லை.. சீனியர் சீனிவாசனின் வேலை..."
"அவர் மேல் பழிபோட்டாகிறதா..? அதென்ன சீனியர் சீனிவாசன்..?"
"அவர் சீனியர் சீனிவாசன்.. நான் கௌதம் சீனிவாசன்.."
"இது ஒரு பெருமையா..? அப்ப பாட்டி சொல்கிறது சரிதான் போல..."
"பாட்டி என்ன சொன்னாங்க..?"
"நீங்க.. தாத்தாவைக் காப்பியடிக்கிறிங்கன்னு சொன்னாங்க.."
"ஊஹீம்.. யாரையும் நான் காப்பியடிக்கலை.. நான்.. நானாத்தான் இருக்கனும்னு ஆசைப்படுகிறேன்.."
"அப்புறம் எதுக்கு.. இந்த சீனியர்.. ஜீனியர்ங்கிற பேச்சு..."
"ஏய்ய்.. ஆயிரம்தான் இருந்தாலும் அவர் என் தாத்தா..."
"நான் இல்லைன்னு சொன்னேனா..? எதுக்கு இந்த பில்ட் அப்..?"
"அவர் பெயரைச் சொல்லுவேன்.. ஆனா.. நான் நானாத்தான் இருப்பேன்.."
"இருந்துக்கங்க.. எனக்கென்ன போச்சு.. ஆனா.. இந்த குடும்ப பாசமெல்லாம்.. தாத்தாகூட மட்டும் நிற்குமா.. இல்லை.. அத்தை மகள் வரைக்கும் தொடருமா..?"
"இப்ப எதுக்காக.. தேவையில்லாம லலிதாவை இழுக்கிற..?"
"யாருக்குத் தெரியும்..? ஆயிரம்தான் இருந்தாலும் என் தாத்தான்னு சொல்லுகிறவர்.. ஆயிரம் தான் இருந்தாலும் அவள் என் அத்தை மகள்ன்னு சொல்ல எவ்வளவு நேரமாகும்..?"
"வேண்டாம்டி... வேணும்னே வம்பு வளர்க்காதே.. சொல்லிட்டேன்..."
"நானா வம்பு வளர்க்கிறேன்..? அவள் சினிமாவுக்கு கூப்பிட்டால் போக வேண்டியதுதானே.. ஊடே என்னை எதற்கு இழுக்கணுமாம்..?"
"நீயே சொல்லிட்ட.. அப்புறமென்ன..?"
"நான் சொல்லிட்டேனா..? என்ன சொன்னேன்..?"
"அது இப்போது தெரியாது.. சினிமாத் தியேட்டருக்கு வந்து பார்த்தால் தெரியும்.."
தெரிந்தது.. சினிமாத் தியேட்டரில் லலிதா உட்கார.. அவளுக்கு அடுத்த இருக்கையில் சுமித்ராவை உட்காரச் சொல்லிவிட்டு.. ஓரமாக இருந்த இருக்கையில் கௌதம் அமர்ந்து விட்டான்..
லலிதாவுக்கும்.. கௌதமிற்கும் ஊடே.. சுமித்ரா அமர்ந்திருக்க...
'ஓ.. இவன் சொன்ன 'ஊடே...' இதுதானா..' என்று நினைவுடன் சுமித்ரா கௌதமைப் பார்த்தாள்...
அவன் முகத்திலிருந்த கள்ளச் சிரிப்பு... 'ஆமாம்..' என்றது..
லலிதாவின் முகத்தில் எள்ளும்.. கொள்ளும் வெடித்தது.. அவள் அதை முற்றிலுமாக எதிர்பார்க்கவில்லை.. கௌதமின் அருகே சுமித்ரா அமர்ந்திருக்க.. சுமித்ராவின் அருகே அவள் அமரும் நிலை உருவாகிவிட.. அவள் மனம் கொந்தளிக்க ஆரம்பித்தது..

 

No comments:

Post a Comment