மைவிழியே மயக்கமென்ன ? - 1

முத்துலட்சுமி ராகவன் எழுதிய

"மை விழியே மயக்கமென்ன...?"

பாகம் – 1


1
காற்றுக்கு  பூவின்  மீது மயக்கம்...
அதைத் தொட்டு விளையாடுகிறது..
என்மீது, உனக்கென்ன மயக்கம்?
என் மனதை தொட்டுத் தொட்டு விளையாடுகிறாயே...

மலைப்பாதையில் வளைந்து ஏறியது அந்த ஜீப்...
           "செந்தாழம்பூவில்...
                வந்தாடும் தென்றல்..
           என்மீது.. மோதுதம்மா..."
ஜீப்பிலிருந்த சிடியில் பாடல் ஒலிக்க.. அந்தப் பாடலுடன் இணைந்து பாடியவாறு  ஜீப்பை ஓட்டிக் கொண்டிருந்தான் கௌதம்..
அவனது முழுப்பெயர் கௌதம் சீனிவாசன்.. எதற்காக இரட்டைப் பெயர்களை அவனுக்கு வைத்தார்கள் என்ற கேள்வியை அவனது பெற்றோரிடம்தான் கேட்க வேண்டும்..
ஏனென்றால் பிறந்தவுடன் அவனுக்கான பெயரை... அவனே தேர்வு செய்து கொள்ள முடியாதே...
அந்த ஒரு காரணத்தினால்தான் அவனுக்கு அந்தப் பெயரே நிலைத்தது... மற்றபடி.. அவன் தன் வாழ்க்கையில்.. அவனுடையது என்று இருக்கும் அனைத்தையும்.. அவனே தேர்வு செய்ய வேண்டும் என்று நினைப்பவன்..
"ஏம்ப்பா எனக்கு இரட்டைப் பெயரால் வைத்தீங்க..?"
"ஏன்னா.. கௌதம்ங்கிற பெயர்.. எனக்கும்.. உன் அம்மாவுக்கும் ரொம்பவும் பிடித்த பெயர்.."
"அப்படியே விட்டிருக்கவேண்டியதுதானே.. அதுக்கப்புறம் எதுக்கு இன்னொரு பெயரும் ஒட்டிக்கிட்டு வருது.."
"அது உன் தாத்தாவின் பெயர்டா.."
"அப்போ.. அதை மட்டும் வைத்திருக்க வேண்டியது தானே..."
"எப்படிடா...?"
"எப்படின்னா...? எனக்குப் புரியலை..."
"உன் தாத்தா பெயரை உனக்கு வைத்தால்.. எப்படி கௌதம் நானும்.. உன் அம்மாவும்.. உன் பெயரைச் சொல்லிக் கூப்பிட முடியும்..?"
இது என்ன வியாக்கினம் என்று கௌதமிற்கு பிடிபடவில்லை.. கூப்பிட முடியாத பெயரை ஏன் தங்களின் பிள்ளைக்கு இவர்கள் வைக்க வேண்டும் என்ற... மெலிதான கோவம் அவனுக்குள் எழுந்தது.. அதைக் கேட்கவும் செய்தான்.. அவனைப் பெற்றவரான மகாதேவனோ.. வேறு ஒரு விளக்கம் சொன்னார்...
"லுக் கௌதம்..."
"பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன்.."
"நானோ என் குடும்பத்திற்கு மூத்தமகன்..."
'இதை எதுக்கு இவர் இப்போது சொல்கிறார்..' என்று மண்டைகாய்ந்து போனான் கௌதம்..
"அப்பா.. இப்படி.. சுத்தி வளைச்சு சீன் போட்டிங்கன்னு வையுங்க.. நான் அதுக்கு தாங்க மாட்டேன்.."
"நீ கேட்டதுக்கு பதிலைச் சொல்ல வேணாமாடா.."
"நீங்க சொல்றது பதிலா..?"
"வேற என்ன...?"
"கதைப்பா.. காலையிலேயே கதை கேட்க நான் ரெடியாயில்லை.. ஆளை விடுங்க.."
"பொறுடா..."
ஏறக்குறைய கெஞ்சிய மகாதேவன்.. பரம்பரைப் பணக்காரர்.. குன்னூரில் இருக்கும் டீ எஸ்டேட்களுக்கு அதிபதி...
அப்படிப்பட்டவரை கெஞ்ச வைத்த அவருடைய சீமந்த புத்திரன் கௌதம் சீனிவாசன்.. ஊட்டியிலிருந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கும்.. ஷாப்பிங் காம்ப்ளெக்ஸீக்கும் அதிபதி..
அது போக.. ஊட்டியில் ரிஸார்ட்டுகளையும் கட்டியிருக்கிறான்..
தாய் ஆறடி பாய்ந்தால்.. குட்டி எட்டடி பாயுமாம்...
இங்கேயோ.. தகப்பனாரின் ஒரு எஸ்டேட்டை.. மூன்று எஸ்டேட்டுகளாக மட்டுமே மகாதேன் மாற்றியிருக்க.. கௌதம் சீனிவாசன்.. ஊட்டியில் காலூன்றி.. அவர்களின் குடும்பத்தின் அடையாளத்தையே மாற்றியமைத்து.. குட்டி ஆறுநூறு அடிபாயும் என்று நிருபித்திருந்தான்..
அதில் மகாதேவனுக்கு மனம் கொள்ளாத பெருமையுண்டு.. மகனின் மேல் அதீதமான பாசமும்.. மரியாதையும் உண்டு..
"அவன் சிங்கக் குட்டிடீ" என்பார் மனைவி விசாலினியிடம்..
"அப்போ.. நீங்க என்ன சிங்கமா..?" என்று கேட்பாள் விசாலினி...
"பின்னே... இல்லையா..?" அவர் மீசையை முறுக்குவார்..
"போதுமே.. என் மகன் சிங்கம்.. அவ்வளவுதான் நான் சொல்வேன்..", அவள் இதழ்களை மடித்து கணவருக்கு அழகு காட்டுவாள்..
மகனின் ஆளுமையான செயல்பாட்டில் அவளுக்கு மலையளவு கர்வம் உண்டு..
'என் மகன்...' பூரித்துப் போவாள்...
அப்படிப்பட்ட மகாதேவன்.. அப்பேற்பட்ட மகனிடம் கெஞ்சுதலாகப் பேசியதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது..?
"பொறுக்கிறேன்.. சொல்லுங்க.."
"நான் என் குடும்பத்திற்கு மூத்த மகன்.."
"இதைத்தான் கீறல் விழுந்த ரிகார்டைப் போலத் தினமும் சொல்கிறீங்களே.."
"எனக்கு நீ மூத்தமகன்.."
'ஆஹா.. எப்பேர் பட்ட கண்டுபிடிப்பு..?'
இவ்வளவு பெரிய எஸ்டேட் ஓனர்.. இப்படிப்பட்ட அறிவு ஜீவித்தனத்தோடு பேசி வைக்கக்கூடாது என்று அவனுக்குத் தோன்றியது..
"இதுக்குத்தான் என் பெறுமையை சோதிக்காதீங்கன்னு சொன்னேன்.."
"அப்படியில்லை கௌதம்.. உனக்கு என் அப்பா பெயரை வைக்காவிட்டால் எப்படிப்பா..?"
என்னவோ.. பட்டத்து இளவரசனிடம்.. அரியனையில் அமர்ந்திருக்கும் மகாராஜா விளக்கம் சொல்வதைப் போலச் சொன்ன மகாதேவனின் முகத்தைப் பார்த்த கௌதமிற்கு சிரிப்புத்தான் வந்தது..
ஆனாலும்.. அது ராஜ்ஜியம்தான்..
மூன்று எஸ்டேட்களும்.. அருகருகே அமைந்திருக்க.. பரந்து விரிந்திருக்கும் ராஜ்யம்..
அதன் சக்ரவர்த்தி மகாதேவன் என்பதும்.. அடுத்த உரிமையாளனான கௌதம்.. இளைய ராஜாவாக கௌரவிக்கப் படுகிறான் என்பது உண்மைதான்..
கௌதமோடு ஒட்டிக் கொண்டிருக்கும் சீனிவாசன் என்ற பெயரைக் கொண்ட அவனுடைய தாத்தாவை கௌதமிற்கு ரொம்பப் பிடிக்கும்..
அந்த ஒரு காரணத்துக்காகவே.. தனது இரட்டைப் பெயரை சந்தோசமாக ஏற்றுக் கொண்டான் கௌதம்..
சீனிவாசன் அன்பானவர்.. பேரனுக்கு பிரியமான தோழன்.. அந்தக் காலத்தில் ராணுவத்தில் சேவை செய்து ஓய்வு பெற்ற கர்னல்..
"ம்ஹீம்.. எஸ்டேட் ஒனருன்னு சொல்லி.. இவருக்கு என்னைக் கட்டி வைத்தாங்கடா கௌதம்.."
பெருமூச்சுடன் கதை சொல்வாள் அவனுடைய பாட்டி துளசி அதை சுவராஸ்யமாக கேட்பான் கௌதம்...
அது என்னவோ.. அவனுக்கு மகாதேவன் கதை சொன்னால் தான் கேட்க சலிப்பு வரும்..
அதுவே.. துளசியும்.. சீனிவாசனும் கதை சொன்னால் விடிய.. விடிய.. விழித்திருந்து கூடக்
கதை கேட்பான்..
கதை சொல்வதில் அவர்கள் கை தேர்ந்தவர்கள்.. அதிலும் முரண்பாடான கதைகளைச் சொல்பவர்கள்..
துளசியின் சாத்விகமான எதிர்பார்புகளைக் கொண்ட கதைகளுக்கூடே.. தனது வரையறைகளை உடைக்கும். முற்போக்கான கதைகளை முன் வைப்பார் சீனிவாசன்...
"என்னை மட்டுமென்னடா கௌதம்.. காலேஜில் படித்தவள்ன்னு சொல்லித்தான் இவளை எனக்கு கட்டி வைத்தாங்க..."
அவரும் பெருமூசு விடுவார்.. ஆனால்.. சீனிவாசனின் பெருமூச்சு வேறுவகையானதாக இருக்கும்.. அது அனல் பெருமூச்சு..
"இவர் எஸ்டேட்டில் அடங்கி இருக்கலை..."
"இவ என்கூட வரமாட்டேன்னு சொல்லிட்டா.."
"இவருக்கு எதுக்குடா ராணுவத்தில உத்தியோகம்..?"
"வெறும் உத்தியோகமில்லைடி அது.. வீரமான உத்தியோகம்.. நான் கர்னல் சீனிவாசன்டி..."
"அதைச் சொல்லு... இந்த எஸ்டேட்டுக்குப் பெயர் 'மேஹா எஸ்டேட்' இவரு தலையெடுத்ததுக்கு அப்புறம்... இது கர்னல் எஸ்டேட்டா மாறிப் போச்சு.."
"அது என்வேலையின் மகிமை.."
"என்ன மகிமையோ.. வருசத்துக்கு ஒருதரம் வருவார்.. இரண்டு மாசம் கூட இருப்பார்.. ஓடி விடுவார்.."
"அதிலேயே.. ஆண் ஒன்னு பெண் ஒன்னுன்னு.. இரண்டு பிள்ளைகள் ஆச்சா... இல்லையா..?"
கௌதமின் முன்னிலையிலேயே துளசியிடம் கண்சிமிட்டுவார் சீனிவாசன்..
அரைத்து  விட்ட மஞ்சளின் நிறத்திலிருக்கும் துளசியின் முகம் குங்குமமாக சிவந்து விடும்...
"ஸ்ஸ்... என்ன இது..? பேரன் இருக்கிற நினைப்பு வேணாமா..?"
சன்னக்குரலில் சீனிவாசனைக் கண்டிப்பாள்.. அவரோ... கட.. கட..வென சிரிப்பார்..
"அவன் என்ன பச்சைக் குழந்தையாடி..? அவனுக்கு தெரியாத விவரமா..?"
இப்போது.. கௌதமை நோக்கி அவரது கண்சிமிட்டல் வரும்..
'இது... இதுதான்... தாத்தா...'
கௌதமின் இதழ்களில் புன்னகை படரும்.. அவனுக்கு அவருடைய அடாவடித்தனத்தை மிகவும் பிடிக்கும்..
அவனுடைய தடாலடியான செய்கைகள் எல்லாம் சீனிவாசனிடமிருந்து அவனுக்கு வந்தவைதான் என்பது துளசியின் கணிப்பு...
"என் கூட வாடின்னு இவளை கல்யாணமான புதிசில டெல்லிப் பக்கம் இழுத்துக்கிட்டுப் போயிட்டேன்..."
"குணம் கெட்ட மனுசன்.. கட்டின பெண்டாட்டியை இழுத்துக்கிட்டுப் போனாராம்.. அப்போதிருந்து.. இப்போ வரை.. இப்படியே இந்த மனுசன் பேசி வைக்கிறாருடா.."
"ஏண்டி.. என்னவோ.. எஸ்டேட் மலைப்பாதையில் போய் கொண்டிருந்தவளை இழுத்துக்கிட்டுப் போனதைப் போல நீ பேசி வைக்கிறயே.. இதுமட்டும் உனக்கு நியாயமாயிருக்க..?"
"எனக்கு நல்லா வந்திரும் வாயிலே.. எதுக்கும்.. எதுக்கும் இணை கூட்டுகிறீங்க..? கேட்டுக்கடா கௌதம்.. மனசில் இருக்கிறது தான் வார்த்தையில வரும்.. இந்த மனுசன் மனசில.. ரோட்டில் போகிறவளை இழுத்துக்கிட்டுப் போக முடியலையேன்னு பெருங்குறையாயிருக்கு போல..."
சீனிவாசனின் பேச்சில் அப்படி யாரையும் இழுத்துக் கொண்டு ஓட முடியாத ஆதங்கம் பெருமூச்சாய் வெளிப்பட்டதென்னவோ.. உண்மைதான்..
அதை துளசி மிகச் சரியாக கணித்துச் சொன்னதுதான் ஆச்சரியம்..
"இப்படித்தாண்டா.. இவ எல்லாத்தையும் கண்டு பிடிச்சுத் தொலைச்சிருவா.. மனசைப் படிக்கிற பெண்டாட்டியை வைச்சுக்கிட்டு.. என்போல எல்லைகளைக் கடக்கிற மனுசன்.. என்ன செய்ய முடியும்ன்னு சொல்லு.."
தனிமையில் பேரனிடம் சொல்லிச் சிரிப்பார் சீனிவாசன்...
"அப்புறம் என்னதான் ஆச்சு பாட்டி.. டெல்லிக்கு போனிங்களா தாத்தாகூட இருந்தீங்களா.. இல்லையா..?"
அவர்கள் விட்ட கதையை தொடர வைப்பான் கௌதம்...
"என்னத்தை இருந்தா.. ஒரே மாதத்திலே ஓடிவந்திட்டா.."
சீனிவாசனின் விழிகளில் இளமைக்காலத்தின் ஏமாற்றம் தெரியும்..
"ஏன் பாட்டி..?"
"அதை எப்படிடா என் வாயால் சொல்லுவேன்.."
"வேணும்ன்னா எழுதிக் காட்டறீங்களா..?"
கௌதம் பவ்யமாய் விவை.. சீனிவாசன்..
"ஹா.. ஹா.." என்று சிரிப்பார்..
துளசி.. அவரை முறைப்பாள்..
"நீங்க பண்ற அழும்பையெல்லாம் என் பேரனுக்கும் சொல்லிக் கொடுக்கறிங்களா..?"
"நான் ஒரு பாவமும் அறியாதவன்டி.."
"யாரு..? நீங்க..? உத்தமபுத்திரன்..?"
"பின்னே... இல்லையா..?"
"இல்லை.."
"நீயே இப்படிச் சொன்னா எப்படி டீ..."
"நான் சொல்ல ஆரம்பிக்கலை.. சொன்னேன்னு வையுங்க.."
"எதை வைச்சுக்கச் சொல்ற..?"
சீனிவாசன் அறியாப்பிள்ளை போல வினவினாலும்.. அவர் கண்களில் மின்னும் விசமம் அவரைக் காட்டிக் கொடுத்து விடும்..
கௌதம் இப்போது வாய் விட்டுச் சிரிப்பான்..
"ஹா... ஹா..."
"வேண்டாம்டா கௌதம்.. இந்த மனுசன் வினை விதைக்கிறவரு.. நான் எதைச் சொன்னா.. இந்த மனுசன் எதில நிக்கிறாருன்னு பார்த்தியா.. புத்தியெல்லாம் அதிலேயேதான் நிக்கும்.."
"நிக்காம வேற என்ன செய்யும்..? அழகான குவார்ட்டர்ஸ்.. கர்னல் பெண்டாட்டிங்கிற பெருமை.. இது எதுவும் வேணாம்ன்னு.. இந்த காட்டைத் தேடி ஓடி வந்திட்டா.. புத்தி அதிலதான் நிக்கும்.."
"அங்கே வீட்டுக்குள்ளேயே இருக்க முடிஞ்சதா கௌதம்..? தினமும் ஒரு பார்ட்டி.. அதுக்கு சீவி.. சிங்காரிச்சுக்கிட்டு.. இவரு கூடப் போகனும்.. போனாலும் சும்மா போகிறதில்லை.. பத்து பேருக்கு முன்னாலே.. என்தோள் மேல கையைப் போட்டுக்கிட்டுத்தான் இவருக்குப் போகனுமாம்.."
துளசியின் கோபத்தில்.. சீனிவாசன் ஏன் அப்படி ஏமாற்றமடைந்த பார்வையைப் பார்க்கிறார் என்று கௌதமிற்குப் புரிந்தது..
"அது நாகரிகம்டி.. நீ பட்டிக்காடு.. உனக்கெங்கே அதைப் பத்தித் தெரியப் போகுது..."
"தெரியவே வேணாம்.. குடியும்... கும்மாளமுமா.. நீங்க அடிக்கிற கூத்தைப் பத்தி எனக்குத் தெரியவே வேணாம்.. அதுதான் நான் வேணாம்ன்னு ஓடி வந்திட்டேனில்ல.. அப்புறம் எதுக்கு என்னைத் தேடி வந்தீங்க.."
"தேடிவராம.. வேற என்னடி செய்யச் சொல்கிற...?"
"விட்டு விட வேண்டியது தானே..?"
"விட முடியுமாடி..? விட்டுப் போகிற சொந்தமா.. இந்த சொந்தம்..?"

No comments:

Post a Comment